

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த துணை பொதுச்செயலாளர் பதவியை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
கோவையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு வைக்கப்பட்டு இருந்த பேனரில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் இடம்பெறவில்லை என்று பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில், அந்த ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி பேசிய வீடியோ தற்போது வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வீடியோவில் எஸ்.பி.வேலுமணி பேசியிருப்பதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் பதவியை ஏற்கப்போவது இல்லை. என்னை நம்பி வந்தவர்களை விட்டு விட்டு பதவியை ஏற்க நான் தயாராக இல்லை. என்னுடன் 9 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். அவர்கள் யாருக்கும் பதவி கொடுக்கவில்லை. எனக்கு மட்டும் பதவி கொடுத்தால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?.
என்னை நம்பி பின்னால் நிற்பவர்கள் எல்லோரும் கஷ்டப்பட்டவர்கள். வீரமணி, விஜயபாஸ்கர், சி.வி சண்முகம், தங்கமணி அந்த மாவட்டத்தினுடைய ஜாம்பவான்கள். செலவு பண்ணி கட்சியை வளர்த்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் பதவி கொடுக்கவில்லை. என்னை நம்பி வந்தவர்களுக்கு பதவியை கொடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஏற்கனவே, த.வெ.க. அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, எஸ்.பி.வேலுமணி தலைமையில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் 25 பேர் விஜய் அரசுக்கு ஆதரவு அளித்தனர். பின்னர் தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்கொண்டதால், மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் சமரசமாக சென்றனர். இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கட்சி பதவியை வழங்காததால் அதிருப்தி நிலவி வருகிறது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு எஸ்.பி.வேலுமணிக்கு துணை பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். ஏற்கனவே, கட்சியில் அவர் வகித்தது தலைமை நிலைய செயலாளர் பதவி. தற்போது அந்த பொறுப்பை மாற்றி விட்டு துணை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்களுக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்படாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில்தான், கோவையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தனது ஆதங்கத்தை எஸ்.பி. வேலுமணி கொட்டி தீர்த்து இருக்கிறார்.
ஏற்கனவே, அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் 6 பேர் ராஜினாமா செய்து உள்ளனர். இதில், 4 பேர் முன்பே த.வெ.க வில் இணைந்துவிட்ட நிலையில், சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் விரைவில் த.வெ.க.வில் இணைய இருக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் எஸ்.பி.வேலுமணியின் இந்த ஆவேச பேச்சு, அவரும் அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற தயாராகிவிட்டாரா? என்ற கேள்வியை கட்சியினர் மத்தியில் எழுப்புகிறது. அவரும் வெளியேறினால், சில அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் உடன் வெளியேறுவார்கள் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.