முதல்-அமைச்சரானால் லோக் அயுக்தா அமைக்க முதல் கையெழுத்து போடுவேன் கமல்ஹாசன் அறிவிப்பு

நான் முதல்- அமைச்சரானால் லோக் அயுக்தா அமைக்க முதல் கையெழுத்து போடுவேன் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
முதல்-அமைச்சரானால் லோக் அயுக்தா அமைக்க முதல் கையெழுத்து போடுவேன் கமல்ஹாசன் அறிவிப்பு
Published on

பொன்னேரி,

பொன்னேரியில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த ஆண்டு விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நான் சினிமாவில் நடிக்கும் போது உங்களிடம் டிக்கெட் கொடுத்து பணம் பெற்றேன். இப்போது உங்களுக்கு கடமை செய்ய வந்துள்ளேன். மாணவர்களே விழித்திருங்கள். நீங்கள் கல்லூரியை விட்டு வெளியே வரும் போது அரசியலும், ஊழலும் இருக்கும். நீங்கள் அரசியல் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். அதை நான் எதிர்ப்பார்க்கிறேன்.

என்னை கல்லூரிக்கும், பள்ளிக்கும் செல்ல விடாமல் சிலர் தடுக்கின்றனர். என்னுடைய கற்பனையை தடை செய்ய முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

நீட்தேர்வு குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், உங்களுக்கு இருக்கும் தெளிவு மத்தியில் யாருக்கும் இல்லை. நம் கல்வியை நம் வீட்டு பிள்ளை படிக்க வேண்டும் என்ற உணர்வு தமிழக அரசுக்கு வர வேண்டும் என்றார்.

தமிழக விவசாயிகளின் பிரச்சினைக்கு என்ன தீர்வு என்ற கேள்விக்கு, சோறு போடுபவனை வணங்க வேண்டும். பீசாவும் விவசாயத்தில் இருந்துதான் வருகிறது. விவசாயிகளை சிறுமையாக நினைக்க கூடாது. விவசாயிகளுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும் என்றார்.

தென்மாநிலங்கள் ஒருங்கிணைந்து திராவிட நாடு உருவாக்க முடியுமா என்ற கேள்விக்கு திராவிடத்தை ஒழிக்க முடியாது என்பது என் கருத்து. திராவிடம் இந்தியா முழுவதும் பரவி கிடக்கிறது என்றார்.

மகளிர் மேம்பாடு திட்டம் செயல்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு, பொன்னான திட்டங்கள் நிறைய இருக்கிறது. அதனை தூசி தட்டி எடுக்க வேண்டும் என்று கமல்ஹாசன் கூறினார்.

கல்வி துறையில் மாற்றம் கொண்டு வரப்படுமா என்ற கேள்விக்கு சம்பளம் வாங்கும் கல்வியாக இருக்க கூடாது. முழுமையாக செதுக்க வேண்டும். எனக்கு கல்வியை தகப்பனார் சீனிவாசன் கற்றுக்கொடுத்தார் என்றார்.

நீங்கள் தமிழக முதல்- அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல் கையெழுத்து எதற்கு போடுவீர்கள் என கேட்டதற்கு, லோக் அயுக்தாவை கொண்டு வருவதற்கு முதல் கையெழுத்து போடுவேன் என்று கமல்ஹாசன் பதில் அளித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com