“தி.மு.க. ஆட்சியை விட குறைவாக கடன் வாங்கினால் பதவி விலகுகிறேன்” - த.வெ.க. அரசுக்கு தங்கம் தென்னரசு சவால்

வெள்ளை அறிக்கை தொடர்பாக த.வெ.க. அரசு மீது முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
vijay, விஜய், தங்கம் தென்னரசு
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசின் வெள்ளை அறிக்கை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-

நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை என்பது தமிழ்நாட்டுக்கு புதிது அல்ல, 2001 மற்றும் 2021ம் ஆண்டுகளில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், 2001ல் வெள்ளை அறிக்கை அதற்கு முந்தைய 10 ஆண்டுகளின் நிதி நிலை விபரங்களைக் கொண்டது. 2021ம் ஆண்டு வெள்ளை அறிக்கை அதற்கு முந்தைய 15 ஆண்டுகளின் நிதி நிலை விபரங்களை கொண்டது.

யாரை காப்பாற்றும் முயற்சி

ஆனால், தற்போது முந்தைய 5 ஆண்டுகளின் நிதி நிலை என கூறப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன? யாரைக் காப்பாற்றும் முயற்சியாக அதற்கு முந்தைய அதிமுக அரசின் விபரங்கள் சொல்லப்படவில்லை?.. இயலாமையை மூடி மறைக்க, வாக்குறுதிகளில் இருந்து தப்பிக்க த.வெ.க. அரசு, மக்களை ஏமாற்ற இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

பொறுப்பில் இருந்து விலகிவிடுகிறேன்

த.வெ.க. ஆட்சி ஒருவேளை 5 ஆண்டுகளை நிறைவு செய்தால், 5 ஆண்டு இறுதியில் தமிழ்நாடு அரசின் கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும். இதை ஒரு சவாலாகவே சொல்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க. அரசு ஒவ்வொரு ஆண்டும் வாங்கிய சராசரி கடனை விட, த.வெ.க. அரசு குறைத்து வாங்கினால், நான் பொறுப்பில் இருந்தே விலகிவிடுகிறேன்

நாளை எங்களிடம் புதிய திட்டம் எதையும் எதிர்பார்க்காதீர்கள் என்பதை சொல்லாமல் சொல்லவே கவர்னர் உரைக்கு முன்பாகவே இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எஸ்கேப்பிசம்

த.வெ.க. அரசின் வெள்ளை அறிக்கையை எஸ்கேப்பிசம் என்று சொல்லலாம்; வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தங்கள் இயலாமையை மூடிமறைக்க த.வெ.க. அரசு முயற்சி செய்கிறது.

பரந்தூர் விமான நிலையத் திட்டம் உள்பட தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கும் மூலதன திட்டங்களை எல்லாம் நிறுத்தி வைத்துவிட்டு, திமுக அரசு மூலதன திட்டங்களுக்காக செலவிடவில்லை எனக் கூறுகிறது த.வெ.க. அரசு. காலை உணவுத் திட்டம் போன்ற தமிழ்நாட்டில் உள்ள பல மக்கள் நலத் திட்டங்கள் குஜராத்தில் கிடையாது.

தேர்தல் வாக்குறுதிகள்

த.வெ.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றும் என்பதை, பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்திலேயே எல்லோரும் பார்த்தோம். இடைக்கால பட்ஜெட்டிலேயே அரசின் நிதி நிலைமையை தெளிவாக குறிப்பிட்டோம். அதற்குப் பிறகுதான் த.வெ.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டது. இப்போது வாக்குறுதிகளை நிறைவேற்ற வழியில்லாமல் காரணங்களைக் கூறி தப்பிக்கப் பார்க்கிறார்கள்

நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ரூ.6 லட்சம் கோடி தேவைப்படும். உங்கள் ஆட்சி முடிவில் அரசின் கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும். இதையும் மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள். அப்போது என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதையும் பார்க்கத்தான் போகிறோம்.

அரசு கடன் வாங்குவது தவறு அல்ல, அந்தக் கடனை எப்படி மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம்

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com