'தர்மயுத்தம் நடத்தி கச்சத்தீவை மீட்பேன்' - ஓ.பன்னீர்செல்வம் உறுதி

காங்கிரஸ் அரசு தாரை வார்த்ததால் மீனவர்களின் உரிமை பறிபோய் விட்டது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பரமக்குடி சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு முன்னாள் முதல்-அமைச்சரும், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர், "நான் முதல்-அமைச்சராக இருந்தபோது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மெரினா கடற்கரையில் மிகப்பெரிய போராட்டம் நடந்தது. உடனே நான் பிரதமர் மோடியை நேரடியாக சந்தித்து இதுகுறித்து விளக்கி கூறினேன். அதன்பேரில் மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு 24 மணி நேரத்தில் அனுமதி பெற்று தந்தவர் பிரதமர் மோடி தான்.

4 ஆண்டு காலம் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது முழு ஒத்துழைப்பு அளித்தேன். எனக்கு துணை முதல்-அமைச்சர் பதவி கொடுத்த போது, வேண்டாம் என்றேன். பிரதமர் மோடி சொன்னதால்தான் அதையும் ஒப்புக்கொண்டேன். எடப்பாடி பழனிசாமி எந்தெந்த பைல்களுக்கு எப்படி கையெழுத்திட்டார் என்பது எனக்கு தெரியும். அதில் நானும் கையெழுத்து போட்டேன்.

தமிழகத்துக்கு 11 மருத்துவ கல்லூரிகளை தந்தது மோடி அரசுதான். எய்ம்ஸ் மருத்துவமனை மதுரைக்கு வர வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அதையும் நிறைவேற்றி தந்தார். நாடு முழுவதும் பிரதமர் மோடி அலை வீசுகிறது. மோடியின் தயவால் ஆட்சி செய்துவிட்டு, தற்போது கூட்டணியில் இருந்து விலகிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

கச்சத்தீவு, ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் சொத்து. இந்த மண்ணின் சொத்து. அந்த ஆவணம் அரசு கஜானாவில் உள்ளது. அதை காங்கிரஸ் அரசு தாரை வார்த்துவிட்டது. அதனால் மீனவர்கள் உரிமை பறிபோய்விட்டது. கச்சத்தீவை மீட்க வேண்டும் என மோடி கூறியுள்ளார். நானும் தர்மயுத்தம் நடத்தி அதை மீட்பேன்" என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com