கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் விவகாரம்; ஐஏஎஸ் அதிகாரி கவிதா ராமு ஆதரவு

கடினமான காலத்தை கடந்து கலெக்டர் மனவலிமையுடன் மீள வேண்டும் என ஐஏஎஸ் அதிகாரி கவிதா ராமு கூறியுள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரி கவிதா ராமு ஆதரவு
Published on: 

சென்னை,

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் மீது கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் காவல்துறையில் எழுத்துப்பூர்வ புகார் அளித்துள்ள நிலையில், ஐ.ஏ.எஸ் அதிகாரி கவிதா ராமு அவருக்குத் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாகத் தமிழக அரசியலிலும் அதிகாரிகள் மட்டத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் கள்ளக்குறிச்சி விவகாரம், கலெக்டரின் அதிகாரப்பூர்வ புகாரைத் தொடர்ந்து அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

ஆதரவு குரல்

சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு தனக்கு வாட்ஸ்அப்பில் தகாத செய்திகள் அனுப்பியதாக எம்.எல்.ஏ மீது கலெக்டர் புகார் அளித்துள்ளார். இதுவரை எழுத்துப்பூர்வ புகார் இல்லாததால் மௌனம் காத்து வந்த சக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், தற்போது கலெக்டருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், ஐ.ஏ.எஸ் அதிகாரி கவிதா ராமு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு கவனம் ஈர்த்துள்ளது.

ஐஏஎஸ் அதிகாரி ஆதரவு

இது குறித்துக் கவிதா ராமு தனது பதிவில் கூறியிருப்பதாவது: "சம்பந்தப்பட்ட அதிகாரி தற்போது எழுத்துப்பூர்வ புகார் அளித்துள்ளதால், இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசுவதில் எந்தத் தவறும் இல்லை என்று நான் நம்புகிறேன். சமூக வலைதளங்களில் பலவிதமான கதைகளும் கருத்துகளும் பரவத் தொடங்கியபோது, மாவட்ட கலெக்டருக்கும் அவரது கணவருக்கும் அது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பே நடந்திருந்தாலும், சமூக வலைதளங்களில் இது பரபரப்பான பிறகுதான் எங்களில் பலருக்கும் தெரியவந்தது. எங்களது ஆதரவைத் தெரிவிப்பதற்காக இந்த மாதம் 11-ஆம் தேதி கலெக்டருடன் நான் விரிவாகப் பேசினேன். அப்போது, இந்த விவகாரம் உயர்மட்டத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். அதே சமயம், இப்படியொரு சம்பவமே நடக்காதது போல் சில சமூக வலைதளப் பக்கங்கள் இதைச் சித்தரிப்பதைக் கண்டு அவர் மிகுந்த வேதனை அடைந்துள்ளார்.

பணியாற்ற விருப்பம்

அவர் பணியிட மாற்றம் (டிரான்ஸ்ஃபர்) ஏதேனும் கோரியுள்ளாரா என்று நான் கேட்டேன். அதற்குப் கலெக்டர், தலைமைச் செயலாளரே கூட வேறு மாவட்டத்திற்கு மாறுவது குறித்துப் பரிசீலிக்குமாறு முன்பு அறிவுறுத்தியதாகவும், ஆனால் தான் கள்ளக்குறிச்சியிலேயே தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாகத் தெளிவுபடுத்திவிட்டதாகவும் கூறினார். இது மிகுந்த துணிச்சலான முடிவு!

மனவலிமையுடன் மீள வேண்டும்

சக அதிகாரிகளாகிய நாங்கள் ஏன் இந்தப் பிரச்சினையை முன்பே கையில் எடுக்கவில்லை என்று பலரும் என்னிடம் கேட்டனர். நாங்கள் அதைச் செய்யத்தான் விரும்பினோம். ஆனால், பாதிக்கப்பட்டவரான எங்கள் சக அதிகாரியின் சம்மதமும் விருப்பமும் இல்லாமல் செயல்படுவது சரியல்ல என்று நாங்கள் நினைத்தோம். அவரது சுயமரியாதைக்கும் விருப்பத்திற்குமே முதலிடம் கொடுக்க வேண்டியிருந்தது. இத்தகைய சூழ்நிலையில் ஒரு பெண் என்னவெல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. கலெக்டர் இந்தக் கடினமான அத்தியாயத்தைக் கடந்து, அவருக்குரிய மன அமைதியையும் வலிமையையும் பெற வேண்டும் என்று நான் மனதார விரும்புகிறேன் இவ்வாறு கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு

முன்னதாக, சென்னை ஐகோர்ட்டின் தலையீட்டைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி கலெக்டர் நேற்று (நவம்பர் 24) கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்ததை அடுத்து, எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு (FIR) செய்துள்ளனர்.

X