கொரோனா ஒழிப்பில் அரசுடன் தொண்டு நிறுவனங்களை ஒன்றிணைக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொண்ட மாநில ஒருங்கிணைப்பு குழு; தமிழக அரசு தகவல்

கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் அரசுடன் தொண்டு நிறுவனங்களை ஒன்றிணைப்பதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொண்ட மாநில அளவிலான ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஒழிப்பில் அரசுடன் தொண்டு நிறுவனங்களை ஒன்றிணைக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொண்ட மாநில ஒருங்கிணைப்பு குழு; தமிழக அரசு தகவல்
Published on

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதல்-அமைச்சர் வேண்டுகோள்

கொரோனா 2-ம் அலை பரவலைத் தடுக்கும் வகையில் அரசுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் 19-ந் தேதியன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியபோது, கொரோனா பரவல், முதல் அலையைவிட 2-வது அலையில் மிக கடுமையாகவும், பெரும் சவாலாகவும் உள்ளது. இதை அரசின் செயல்பாடுகள் மட்டுமே முற்றிலும் ஒழித்துவிட முடியாது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் களத்தில் நின்று ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஒருங்கிணைப்பு குழு

மேலும், அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ஆக்சிஜன், உயிர் காக்கும் மருந்துகள் வழங்குவது, கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இலவச வாகன வசதிகள் செய்வது, இந்நோய் தீவிரம் குறித்தும், தடுப்பூசி போடப்படுவதன் முக்கியத்துவம் குறித்தும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற சேவைகளில் ஈடுபட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசுடன் கைகோர்த்து செயல்பட்டால், இந்த நெருக்கடி காலத்தை எளிதில் வெற்றி கொண்டு மக்களை காக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.இந்த பணிகளை ஒருங்கிணைத்து மக்களுக்கு உதவிட மாநில அளவிலான ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.தற்போது மாநில அளவிலான ஒருங்கிணைப்பு குழுவுக்கு அதிகாரிகளை உறுப்பினர்களாக நியமித்து மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

உறுப்பினர்கள்

அதன்படி, வணிக வரித்துறை கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) ஜி.லட்சுமிபிரியா, பொது (சட்டம் ஒழுங்கு) துறை துணைச் செயலாளர் எஸ்.பி.அம்ரித், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தகுமார், தமிழ்நாடு மின்னணு நிறுவன பொதுமேலாளர் ஆ.கண்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த குழு தன்னலம் கருதா தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து கொரோனா பெருந்தொற்று நோயை ஒழிக்க மேற்கொள்ளும் பணிகளுடன் சேர்த்து, பெருந்தொழில் நிறுவனங்களிடம் இருந்து சமூக பங்களிப்பு நிதியைப் பெற்று அதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காக்க மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பணிகளையும் மேற்கொள்ளும்.

தொடர்பு மின்னஞ்சல்

மாநில அளவிலான இந்த ஒருங்கிணைப்பு குழு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள தேசிய சுகாதார இயக்கக வளாகத்தில் இயங்கிவரும் கட்டளை மையத்தில் தனது பணிகளை மேற்கொள்ளும். தனியார் தொண்டு நிறுவனங்கள் tnngocoordination@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் மாநில ஒருங்கிணைப்பு குழுவைத் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com