நடப்பு நிதியாண்டில் ஐ.சி.எப். தொழிற்சாலையில் 4,500 ரெயில் பெட்டிகள் தயாரிக்க இலக்கு

ஐ.சி.எப். தொழிற்சாலையில் பல்வேறு வகையிலான ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் ஐ.சி.எப். தொழிற்சாலையில் 4,500 ரெயில் பெட்டிகள் தயாரிக்க இலக்கு
Published on

சென்னை,

ஐ.சி.எப். தொழிற்சாலை

சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) இந்திய ரெயில்வேக்கு தேவையான ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத், மின்சார ரெயில், எல்.எச்.பி. எனப்படும் இலகுரக ரெயில் பெட்டிகள், ஹைட்ரஜன் ரெயில்கள் என பல்வேறு வகையிலான பெட்டிகள் இங்கு தயாரிக்கப்படுகிறது.

ரெயில் பெட்டிகள்

கடந்த 2023-24-ம் நிதியாண்டில் 2,829 பெட்டிகள் தயாரிக்கப்பட்டது. 2024-25-ம் நிதியாண்டில் 3,007 ரெயில் பெட்டிகளும், 2025-26-ம் நிதியாண்டில் 3,405 ரெயில் பெட்டிகளும் ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. இந்தநிலையில், நடப்பு நிதியாண்டில் (2026-27) ஐ.சி.எப். தொழிற்சாலையில் எவ்வளவு பெட்டிகள் தயாரிக்க ரெயில்வே வாரியம் இலக்கு நிர்ணயித்துள்ளது என்பதன் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்.எச்.பி. பெட்டி

இதுகுறித்து, ஐ.சி.எப். அதிகாரிகள் கூறும்போது, “நடப்பு நிதி யாண்டில் (2026-27) ஐ.சி.எப். தொழிற்சாலையில் 4,500 ரெயில் பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3,520 எல்.எச்.பி. பெட்டிகளும், 8 தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்களுக்கான பெட்டிகளும், 14 அம்ரித் பாரத் ரெயில்களுக்கான பெட்டிகளும், 1 சரக்கு ரெயிலுக்கான பெட்டிகளும் இதில் அடங்கும்.

இலக்கை விரைவில் அடையும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் அதிக அளவில் எல்.எச்.பி. பெட்டிகளை தயாரித்து சாதனை படைத்ததைபோலவே, இந்த ஆண்டும் உற்பத்தியை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com