கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் கண்டறிந்து தெரிவிக்குமாறு கலெக்டர்களுக்கு உத்தரவிடவேண்டும் என்று மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
Published on

புதுடெல்லி,

கொரோனாவால் 30 ஆயிரத்து 71 குழந்தைகள், அனாதை ஆக்கப்பட்டுள்ளதாக தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடந்த ஜூன் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது. கொரோனா 2-வது அலையின்போது, கடந்த ஏப்ரல் முதல் மே 28-ந் ததிக்குள் 645 குழந்தைகள், பெற்றோரை இழந்ததாக சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

மேலும், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை பிரதமர் மோடி கடந்த மே மாதம் வெளியிட்டார். இந்த குழந்தைகள் 23 வயதை பூர்த்தி செய்யும்போது, பி.எம்.கேர்ஸ் நிதியத்தில் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிப்பதும் அவற்றில் ஒன்றாகும்.

இந்தநிலையில், இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் இன்டிவர் பாண்டே ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கொரானாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பி.எம்.கேர்ஸ் நிதியத்தில் இருந்து உதவி பெற தகுதி பெறுவார்கள். அந்த குழந்தைகளை அடையாளம் காணுமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட வேண்டும்.

அந்த குழந்தைகளின் விவரங்களை பதிவு செய்வதற்காக ஒரு பிரத்யேக வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் அவர்கள் உடனடியாக உதவி பெற வழி பிறக்கும். பிரத்யேக உதவி மையமும் தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை போலீஸ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, சைல்டுலன் போன்ற அமைப்புகளின் உதவியுடன் கலெக்டர்கள் அடையாளம் காண வேண்டும். அத்தகைய குழந்தைகளை தேர்வு செய்து குழந்தைகள் நலக்குழு சிபாரிசு செய்யலாம். அதை பரிசீலித்து இறுதி முடிவு எடுக்க வேண்டியது மாவட்ட கலெக்டரின் பொறுப்பாகும். கலெக்டர் எடுக்கும் முடிவே இறுதியானது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com