பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் குழந்தைகளின் அடையாளங்கள் பாதுகாக்கபட வேண்டும் - நயினார் நாகேந்திரன்

குழந்தைகளின் தனியுரிமையையும் மன நலனையும் பாதுகாக்க வேண்டுமென தமிழக பாஜக சார்பாக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கிறேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

போக்சோ வழக்குகளில் பாதிக்கப்படும் குழந்தைகளின் அடையாளங்களும் தனியுரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும்!

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் :-

தமிழகத்தில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகளை விசாரிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் இளைஞர் நீதிக் குழுமங்கள். குழந்தைகளுக்கு சங்கடமான சூழ்நிலையில் இயங்கி வருவதாக வெளியாகியுள்ள செய்தியை தவெக அரசு கவனத்துடன் கையாள வேண்டும்.

ஆபத்து

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி, தஞ்சாவூர் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில், போதிய கழிப்பறை வசதி. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பிரத்யேக வாக்குமூல அறைகள், குழந்தைகளின் தனியுரிமையை பாதுகாக்கும் வகையிலான தனி நுழைவு வாயில் காத்திருப்பு அறைகள் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இயங்கும் இளைஞர் நீதி குழுமங்களால், பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாவதோடு, அவர்களின் தனிப்பட்ட விவரங்கள் பொதுவெளியில் கசிவதற்கான ஆபத்தும் உள்ளது.

அரசின் தலையாய கடமை

மேலும். இதுபோன்ற பாதுகாப்பற்ற சூழலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், விசாரணைக்கு வர அஞ்சுவதற்கும், குற்றவாளிகள் தப்பிப்பதற்கும் வாய்ப்புள்ளதால். முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இந்த விவகாரத்தில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். முந்தைய திமுக ஆட்சியில் அண்ணா பல்கலை கழக மாணவியின் தனிப்பட்ட விவரங்கள் வெளியாகியதை போல, இன்னொரு அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வது அரசின் தலையாய கடமை.

எனவே, ஒவ்வொரு மாவட்டத்தில் இயங்கும் இளைஞர் நீதி குழுமத்திலும். மாண்பமை உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறைகளின்படி, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை அம்மாவட்ட ஆட்சியர், குழந்தைகள் நல ஆர்வலர் உள்ளிட்டோரின் தலைமையில் ஆய்வுகள் மேற்கொண்டு, பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தனியுரிமையையும் மன நலனையும் பாதுகாக்க வேண்டுமென தமிழக பாஜக சார்பாக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கிறேன்.

X

Daily Thanthi
www.dailythanthi.com