வடமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை - அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்


வடமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை - அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்
x

வடமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.

சென்னை,

தமிழ்நாடு சட்டசபையில் காவல்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய பண்ருட்டி வேல்முருகன், 'தமிழகத்தில் வேலை தேடி வரும் வடமாநிலத்தவர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாகவும், அவர்கள் காவல்துறைக்கு பெரிய தலைவலியாக மாறி உள்ளதாகவும்' கூறினார்.

மேலும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வடமாநிலத்தவர்கள் பிரச்சினைகளில் ஈடுபட்டு உள்ளதாக கூறிய அவர், அதை தட்டிக்கேட்க போன போலீசாரை அடித்து மண்டையை உடைக்கிறார்கள், ஓட விடுகிறார்கள் எனவும் குற்றம்சாட்டினார்.

தர்மபுரியில் சுற்றுலா வந்த வடமாநிலத்தவர்களின் வாகனத்தில் 'பெர்மிட்' இருக்கிறதா? என சோதனை செய்ய முயன்ற காவல்துறை அதிகாரியை அடித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போனால் மத்திய உள்துறையில் இருந்தும் டெல்லியில் இருந்தும் தமிழக காவல்துறைக்கு அழுத்தங்கள் வருவதாகவும், எனவே வடகிழக்கு மாநிலங்களில் இருப்பது போல தமிழகத்துக்கு வரும் பிற மாநில தொழிலாளர்களை கண்காணிக்கும் முறையை கொண்டு வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், 'அதுபோன்று நம்முடைய காவல்துறைக்கு எந்த அழுத்தமும் வரவில்லை' என மறுத்தார். தொடர்ந்து பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், 'வட மாநிலத்தவர் வருகை குறித்தும், தமிழகத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும்' என்றும் தெரிவித்தார்.

1 More update

Next Story