

உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில் உலக புகழ்பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் உள்ளது. பல்வேறு காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக இந்த கோவிலில் மாசிபச்சை திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில் கோவில் திருவிழாவை நடத்த அனுமதி வழங்க கோரி கோட்டைச்சாமி என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் மார்ச் 25, 26-ந் தேதி பெட்டியை எடுத்து சென்று கோவிலில் வைத்து வழிபாடு நடத்த நீதிபதி சாமிநாதன் கடந்த 20-ந் தேதி உத்தரவிட்டார்.
இதன்படி நேற்று உசிலம்பட்டி துணை சூப்பிரண்டு நல்லு தலைமையில் காவல்துறை பலத்த பாதுகாப்புகள் செய்யப்பட்டிருந்த சூழலில் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்ற நபர்கள் பெட்டியை எடுத்து செல்ல இன்று இரவு வரை பெட்டி உள்ள கோவிலுக்கு வரவில்லை, இந்நிலையில் மாசி திருவிழாவிற்காக பாப்பாபட்டி கிராமத்தில் செய்து வைக்கப்பட்டிருந்த பிரம்மகுல ராக்கம்மாள், கொல்லிமலை ராக்கம்மாள் என்ற இரு சிலைகளை மட்டும் போலீசார் பாதுகாப்புடன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட பூசாரிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாப்பாபட்டி மந்தையிலிருந்து சாமி சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து ஒச்சாண்டம்மன் கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.