அதிமுகவில் நடிகர் தனுஷ் இணைந்தால் இருகரம் கூப்பி வரவேற்போம் - ராஜேந்திர பாலாஜி

இயக்கத்துக்கு நல்ல கருத்துகள் எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும் என ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.
அதிமுகவில் நடிகர் தனுஷ் இணைந்தால் இருகரம் கூப்பி  வரவேற்போம் - ராஜேந்திர பாலாஜி
Published on: 

சிவகாசி,

நடிகர் தனுஷ் அதிமுகவில் இணைந்தால் அவரை இருகரம் கூப்பி வரவேற்போம் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரவுள்ளதாகவும், ‘தமிழக எழுச்சிக் கழகம்’ என்ற பெயரில் கட்சி தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகவும் அண்மையில் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. எனினும், இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையே, இனிவரும் காலங்களில் தனுஷ் ரசிகர் மன்றங்கள் நற்பணி இயக்கமாகச் செயல்படும் என்று கடந்த 15-ம் தேதி நடைபெற்ற ரசிகர் மன்றக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், நற்பணி இயக்கத்துக்கான கொடி மற்றும் சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:

“அதிமுகவுக்கு யார் வந்தாலும் அவர்களை இணைத்துக்கொள்ளும் பக்குவம் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி. இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அவர் இணைத்துக்கொள்வார். இவர் வரலாம், அவர் வரலாம் என்று யாரையும் பிரித்துப் பார்ப்பதில்லை. இயக்கத்துக்கு நல்ல கருத்துகள் எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

இருகரம் கூப்பி வரவேற்போம்

இளைஞர்கள் மத்தியில் நடிகர் தனுஷ் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவராக இருக்கிறார். முன்னணி நடிகராக இருக்கும் அவர், அதிமுகவில் இணைந்தால் இருகரம் கூப்பி வரவேற்போம்.

நடிகர்கள் அரசியலுக்கு வரலாம். ஆனால், அரசியலுக்கு வந்த பிறகு நடிக்கக் கூடாது. இன்று சிலர் திரைப்படங்களிலும் நடிக்கிறார்கள்; அரசியலிலும் ஈடுபடுகிறார்கள்.

நடிகர் தனுஷ் அதிமுகவில் இணைய விரும்புவதாகக் கூறப்படும் தகவல் உண்மையா அல்லது வதந்தியா என்பதை காலம்தான் பதில் சொல்லும்” என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com