விடுப்பு கேட்டால் அதிகாரிகள் அவமானப்படுத்துவதாக வீடியோ வெளியிட்ட போலீஸ்காரர் பணியிடை நீக்கம்

விடுப்பு கேட்டால் உயர் போலீஸ் அதிகாரிகள் அவமானப்படுத்துவதாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட மதுரை போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
விடுப்பு கேட்டால் அதிகாரிகள் அவமானப்படுத்துவதாக வீடியோ வெளியிட்ட போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
Published on

மதுரை,

மதுரை ஆயுதப்படை போலீஸ்காரர் அப்துல்காதர் இப்ராகிம். கடந்த மாதம் 26-ந்தேதி இவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது.

அதில் அவர், பொது விடுமுறைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பணியாற்றும் போலீசாருக்கு ஈடுகட்டும் விடுப்பு வழங்கப்படுவது வழக்கம். இந்த விடுப்பை வழங்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர்கள் விடுப்பு தரமறுத்தது மட்டுமின்றி என்னை அவமானப்படுத்திவிட்டனர்.

ஆண்டுதோறும் ஒவ்வொரு போலீஸ்காரருக்கும் வழங்கப்பட வேண்டிய 20 நாள் விடுப்பும் வழங்கப்படுவதில்லை. தொடர் பணிச்சுமை காரணமாக போலீசார் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். விடுமுறை கேட்டுச்செல்பவர்களை போலீஸ் அதிகாரிகள் அவமானப்படுத்துகின்றனர். எனவே இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீஸ் துறை ரீதியான விஷயங்களை சமூகவலைத்தளத்தில் பதிவு செய்தது குறித்து அப்துல்காதர் இப்ராகிம் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் விசாரணை மேற்கொண்டார்.

விசாரணை முடிவில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மதுரை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆன்ந்த் சின்கா, அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com