“நான் முதல்-அமைச்சர் விஜய்க்கு ஒரு அறிவுரை சொல்வதானால்..!!” - ஆர்.எஸ்.பாரதி

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வில் இருந்த நிர்மல் குமாருக்கு மற்றவர்களைப் பற்றி பேச யோக்கியதை கிடையாது என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
“நான் முதல்-அமைச்சர் விஜய்க்கு ஒரு அறிவுரை சொல்வதானால்..!!” - ஆர்.எஸ்.பாரதி
Published on

சென்னை,

அமைச்சர் நிர்மல் குமாரது பேச்சிற்கு தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

அமைச்சர் நிர்மல் குமாருக்கு வாயில் உண்மையே வராது. அதற்கு காரணம், அவர் ஆர்.எஸ்.எஸ்-ஸில் இருந்தவர். RSS மற்றும் BJP-யில் இருந்தவருக்கு மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு எந்த யோக்கியதையும் கிடையாது. நாங்கள் தொடக்கத்திலிருந்தே பாஜகவை எதிர்த்தவர்கள். இன்றும் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறோம்.

நிர்மல் குமார்

நிர்மல் குமார் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு மாதிரி பேசக்கூடியவர். அவர் ஆர்.எஸ்.எஸ்-ஸில் இருந்தார், அதிமுக-வில் இருந்தார். இப்போது தவெக கட்சியில் இருக்கிறார். இன்னும் இந்த ஆட்சி முடிவதற்குள் அவர் எந்தக் கட்சிக்கு போவார் என்று தெரியவில்லை. புதுசாக தனுஷ் ஒரு கட்சி ஆரம்பிக்கப் போகிறார், அண்ணாமலை ஒரு கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்றெல்லாம் பேசுகிறார்கள்.

ஆதவ் அர்ஜுனா

இப்படி புதிதாக யார் கட்சி ஆரம்பித்தாலும், உடனே போய் முதலில் கையெழுத்துப் போட்டு உறுப்பினர் அட்டை வாங்கி வைத்துக்கொள்வது சிலருக்கு பாரம்பரியமான பழக்கம். அதில் முதன்மையானவர்தான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிர்மல் குமார். அதேபோல ஆதவ் அர்ஜுனா போன்றவர்கள் எல்லா கட்சிக்கும் சுற்றிவிட்டுப் போவார்கள். ஆகையினால், அவர்கள் வைக்கும் வாதம் சரியாக இருக்க வேண்டும்.

கடந்த முறை பாராளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டுவரப்பட்டபோது, திமுக-வால் தான் அது தோற்கடிக்கப்பட்டது. எங்கள் தலைவர் தளபதி அவர்கள் அன்று கருப்புச் சட்டை அணிந்து, அந்தச் சட்ட மசோதாவையே எரித்து எதிர்ப்பைப் பதிவு செய்தார். அதற்குப் பிறகுதான் அது தோற்கடிக்கப்பட்டது என்பதுதான் உண்மை.

திமுக மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டது. நாங்கள் கொடுத்த சில திருத்தங்களை மசோதாவில் சேர்த்து வைத்தால், அதை ஆதரிப்பதா இல்லையா என்பதைப் பார்த்துதான் முடிவு செய்ய முடியும். ஆனால், இவர்கள் ஊழலை மறைப்பதற்காகத் திரும்பத் திரும்பத் திசை திருப்புகிறார்கள்.

கோவை மாணவர் கொலை

கோவையில் மாணவர் கொலை சம்பவம் நடந்துள்ளது. அன்று திமுக ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தில் 85 நாட்களுக்குள் தண்டனை பெற்றுத் தந்து தவறு செய்தவர்களை உள்ளே சிறைக்கு அனுப்பினோம். ஆனால், தூத்துக்குடி பெண் பாதிக்கபட்ட விவகாரத்தில், அவர்கள் கட்சியினரே சம்மந்தப்பட்டிருப்பதாக புகார் அளித்தும் 100 நாட்கள் ஆகியும் அதற்கு இன்னும் பரிகாரம் கிடைக்கவில்லை; கேசும் போடவில்லை, ஒன்றும் செய்யவில்லை.

'நான்காவது தூண்'

நேற்று ஒரு மாநாடு நடந்தது. எவ்வளவு பெரிய மாநாடாக இருந்தாலும், 'நான்காவது தூண்' (Fourth Pillar) எனப்படும் பத்திரிகையாளர்களுக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால், பத்திரிகையாளர்களையே உள்ளே விடவில்லை. அங்கு என்ன நடந்தது என்று யாருக்குமே தெரியவில்லை; முதலமைச்சரே பேசவில்லை. முதலீட்டாளர்கள் எல்லாம் வந்துவிட்டதாக இவர்கள் சொல்கிறார்கள். ஆனால், எங்கள் தலைவர் அன்றைக்குக் கொண்டுவந்து போட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இரண்டாம் கட்டத்திற்கான தொகையைப் போட்டிருக்கிறார்கள்; அவ்வளவுதான்.

அப்படி இருக்கும்போது பத்திரிகையாளர்களை அனுமதித்தால் என்ன? மக்களுக்கு உண்மைகள் வெட்டவெளிச்சமாகத் தெரிந்துவிடும் என்பதற்காகவே இந்த ரகசியம். பத்திரிகையாளர்களையே அனுமதிக்காமல் ஒரு கூட்டத்தை நடத்துவது தமிழ்நாட்டிலேயே இதுதான் முதல் முறை.

சொத்து வரி/வீட்டு வரி

அதேபோல, சென்னையில் சொத்து வரி/வீட்டு வரி பயங்கரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்றைக்குக் கார்ப்பரேஷனில் 'சுய மதிப்பீடு' (Self-Declaration) மூலம் வரி போடுகிறார்கள். அபார்ட்மெண்டில் 50 வீடுகள் உள்ள இடத்தில் இரண்டு பேருக்குத்தான் மதிப்பீடு செய்தார்கள் என்று பச்சையாக பொய் சொல்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனி மதிப்பீடு மற்றும் பட்டா இருக்கும். அப்படி தவறாக இருந்தால் CMDA மூலம் அந்த கட்டடங்களை இடிக்க வேண்டியதுதானே? அந்த அதிகாரம் உங்களுக்கு இருக்கிறதே!

பொய் பேசும் அமைச்சர்கள்

இப்படிப் பொய் பேசும் அமைச்சர்கள் தான் இன்றைக்கு இருக்கிறார்கள். நேற்றைய தினம் எங்கள் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளரும் முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியம் கண்டன அறிக்கை வெளியிட்டு, மக்கள் மத்தியில் பெரிய கொதிப்பு ஏற்பட்ட பிறகு, தற்போது தற்காலிகமாக அதை நிறுத்தி வைப்பதாக சொல்கிறார்கள்.

நிரந்தரமான தீர்வை இவர்களால் சொல்ல முடியவில்லை. உள்ளாட்சித் துறை அமைச்சரும், அதிகாரிகளும் இதுபற்றி வாய் திறக்கவில்லை. இந்த வரி உயர்வைக் கைவிடாவிட்டால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம்.

தொகுதி மறுசீரமைப்பு

தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) மசோதாவைப் பொறுத்தவரை, திமுக 'Fair Delimitation' என்ற நிலைப்பாட்டில்தான் இருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்தை திமுக ஏற்றுக்கொண்டது. நியாயமான தொகுதி மறுசீரமைப்பு என்பதுதான் எங்கள் கொள்கை. நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று சொன்னோம்.

சர்க்காரியா கமிஷன்

அவர் சர்க்காரியா கமிஷனைப் பற்றியெல்லாம் பேசுகிறார். அப்போது அவர் பிறந்திருக்கவே மாட்டார். சர்க்காரியா கமிஷனுக்குச் சவால் விட்ட ஒரே தலைவர் எங்கள் தலைவர் கலைஞர் மட்டும்தான். அதற்குப் பிறகு பல ஆண்டுகள் எம்.ஜி.ஆர் ஆட்சி நடந்தது. அவர்களால் ஒரு வழக்காவது போட முடிந்ததா? 2001-இல் இரவோடு இரவாகக் கலைஞரைக் கைது செய்தார்களே, அதற்குப் பிறகு 15 ஆண்டுகள் அவர்கள் ஆட்சியில்தான் இருந்தார்கள். ஒரு வழக்கையாவது நிரூபிக்க முடிந்ததா? இதெல்லாம் வரலாறு தெரிந்து பேச வேண்டும்.

விஜய்க்கு அறிவுரை

அவர் நேத்துதான் கட்சி ஆரம்பித்து வந்திருக்கிறார். நான் விஜய்க்கு ஒரு அறிவுரை சொல்வதானால்.. பல கட்சிகளுக்கு சென்று வந்த இதுபோன்ற ஆட்களைத் தயவுசெய்து பக்கத்தில் சேர்க்காமல் இருப்பது அவருக்கு நல்லது. 'கூடா நட்பு கேடாய் முடியும்' என்பதைப் போல, இந்த ஆட்சிக்கு கேடு இவர்களால் தான் வரப்போகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com