

சென்னை,
‘கரூரிலேயே விஜய்யை போட்டிருந்தால்‘ என வேலூர் திமுக கவுன்சிலர் ஒருமையில் பேசினார்.
கடந்த திமுக ஆட்சி யில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருந்தார். அந்த காலக்கட்டத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம். டி.டி.சி.பி., சி.எம்.டி.ஏ., அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாககூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகள் சங்கத் தலைவரும், தி.மு.க. பிரமுகருமான பி.டி.அரசகுமார் உள்பட பலருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர். இதில் பி.டி.அரசகுமார். அவரது உறவினர்களான ஆரோக்கிய ராஜ், சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கின் வேகம் சூடுபிடித்தது.
இதனையடுத்து வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், அன்பில் மகேஷ் முதலில் மனு தாக்கல் செய்தார். பின்னர், வழக்கில் முன்ஜாமின் கேட்டு ஐகோர்ட்டில், அன்பில் மகேஷ் மற்றொரு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, அன்பில் மகேசுக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டார்.
ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ததை தொடர்ந்து தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று கைது செய்யப்பட்டு நள்ளிரவில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அன்பில் மகேஷுக்கு முதல் வகுப்பு சிறையில் அடைக்கவும், தரமான உணவு வழங்கவும் மற்றும் தேவைப்பட்டால் மருத்துவ சிகிச்சை வழங்கவும்" நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக புழல் சிறைக்கு அன்பில் மகேஷ் அழைத்து வந்தபோது போலீஸ் வேனை வழிமறித்து தவெக அரசுக்கு எதிராக திமுகவினர் முழக்கமிட்டனர். மேலும் அவரை சிறைக்குள் அழைத்து செல்லவிடாமல் தடுத்தனர்.
திமுகவினர் புழல் சிறை முன்பு அன்பில் அழைத்து வரப்பட்ட போலீஸ் வேனை வழிமறித்து தவெக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். மேலும் அவரை அழைத்து செல்ல விடாமல் பலர் வாகனத்தை தடுத்தனர். இதையடுத்து போலீசார் திமுகவினரை அப்புறப்படுத்திவிட்டு சிறைக்குள் அன்பில் மகேஷை அழைத்துச் சென்றனர்.
அப்போது ஒருவர் பேசுகையில், “தைரியமாக இருங்க தலைவரே... நம்ம வெளியே வந்துவிடலாம்... தலைவரே அன்றைக்கே அவனை (முதல்-அமைச்சர் விஜய்யை) கரூரில் வைத்து போட்டிருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா?... தலைவரே என ஆவேசமாக கூச்சலிட்டார். மேலும் அதே வார்த்தையை (கரூரில் வைத்து போட்டிருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா?) அருகில் இருந்த நபரிடமும் அவர் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. திமுக நிர்வாகியின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் கரூர் சம்பவத்திற்கு திமுக தான் காரணம் என்று தங்களது கருத்துகளை பதிவிட்டு, தமிழ்நாடு போலீஸ், சிபிஐ, முதல்-அமைச்சர் எக்ஸ் பக்கத்தை டேக் செய்து பதிவிட்டு வருகின்றனர். வீடியோ வைரலானதை தொடர்ந்து யார் அந்த நபர் என்பதை போலீசார் தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில், வேலூர் மாவட்டம் 12 ஆவது வார்டு திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன் என தெரியவந்தது. அவர் அன்பில் மகேஷுக்கு நெருக்கமானவர் என்றும் அவரது தீவிர ஆதரவாளர் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், தலைமறைவாக உள்ள திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். அவர் மீது அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல், மிரட்டும் தொனியில் பேசுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் டீட்டா சரவணனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.