

நடிகர் விஷால் சென்னையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது விஜய், சைக்கிளில் வந்து வாக்கு செலுத்தியது போல விஷாலும் சைக்கிளில் வந்து வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விஷால் கூறியதாவது: இன்று ரொம்ப முக்கியமான நாள். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பாதை அமைப்பதற்கு முக்கியமான நாள். நான் என்னுடைய வாக்கினை செலுத்திவிட்டேன். தற்போது வரை 70% வாக்குகளை எட்டிவிட்டதாக கூறினார்கள். கேரளாவில் 80% வாக்குப்பதிவு கடந்துவிட்டது.
தயவு செய்து இதுவரை வாக்களிக்காதவர்கள் வந்து வாக்கு செலுத்த வேண்டும். அரசியல்வாதிகள் அவர்களின் வேலையை செய்தால், நடிகர்கள் நடிகர்களாகவே இருக்கிறோம். அரசியல்வாதிகள் அவர்களின் வேலைகளை சரியாக செய்யவில்லை. அண்ணா நகர் தொகுதி செழிப்பாக இருக்கிறதா என்று கேட்டால், இல்லை என்பேன். நிறைய இடங்களில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது.
சாலைகளை சரி செய்ய வேண்டிய தேவை உள்ளது. வெள்ளத்தின் போது நாங்களே களமிறங்கி பணியாற்றியுள்ளோம். இந்த தேர்தலில் முதல் தலைமுறை வாக்காளர்கள் அதிகம் வாக்களிக்க வாய்ப்புள்ளது. இந்த முறை யார் வென்றாலும், சிறப்பாக செயல்படுவார்கள்” என்றார்.