“ரஜினி, அஜித், நயன்தாரா வந்தால் இதை விட இரு மடங்கு கூட்டம் வரும்..” - விஜய் பரப்புரை குறித்து சீமான் விமர்சனம்

.நடிகர் அஜித்தை இறக்கினால் இதைவிட இன்னும் கூட்டம் வரும் என்று தவெக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு சீமான் பதில் அளித்தார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார். இதன் ஒரு பகுதியாக திருச்சியில் இருந்து மக்கள் சந்திப்பு பிரசாரத்தை விஜய் நேற்று தொடங்கினார். தொடர்ந்து டிசம்பர் மாதம் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் மக்கள் சந்திப்பை நடத்துகிறார்.
அதன்படி நேற்று காலை நடிகர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்றார். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த விஜய்யை கண்டு அங்கு கூடி நின்ற தொண்டர்கள் ஆரவாரமாக கையசைத்தனர். இதையடுத்து விஜய் பிரசாரத்துக்காக வடிவமைக்கப்பட்ட நவீன ரக பஸ்சில் ஏறி, காலை 9.30 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து காந்திமார்க்கெட் பகுதிக்கு புறப்பட்டார்.
பிரசார வாகனம் கிளம்பியதும், அந்த வாகனத்தின் இருபுறமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சூழ்ந்து கொண்டு, விஜய்யை பார்த்து கையசைத்து கொண்டும், ஆரவாரம் செய்தபடியும் வந்தனர். இதனால் பிரசார வாகனம் மெதுவாக நகர்ந்து சென்றது. வழிநெடுகிலும் அவரை காண கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் த.வெ.க. கொடி நிற துண்டை கழுத்தில் அணிந்து கொண்டு காத்திருந்தனர்.
ஏராளமான பொதுமக்களும் விஜய்யை பார்ப்பதற்காக ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில் திரண்டு நின்றனர். பிரசார வாகனத்தில் இருந்தபடியே நடிகர் விஜய் தொண்டர்களை கைகுலுக்கியும், கையசைத்து கொண்டும் வந்தார். ஒரு சிலர் விஜய்க்கு செங்கோல் மற்றும் பல்வேறு நினைவு பரிசுகளை வழங்கினர். இளைஞர்கள் சிலர் விஜய்யிடம் கிரிக்கெட் பேட்டில் ஆட்டோகிராப் வாங்கினர்.
விஜய்யின் பிரசார வாகனம் விமான நிலையத்தில் இருந்து நகரின் முக்கிய சாலையான டி.வி.எஸ்.டோல்கேட், தலைமை தபால் நிலையம், மேலப்புதூர், பாலக்கரை வழியாக காந்திமார்க்கெட் மரக்கடை பகுதிக்கு வந்தது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ அவரது பிரசார வாகனம் வந்ததால் திருச்சி நகரமே குலுங்கியது.
நேரம் செல்ல, செல்ல விஜய்யை காண திரண்ட மக்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருந்தது. அதில் அதிகமானோர் கைக்குழந்தைகளை தூக்கியபடி ஆர்வத்துடன் வந்திருந்தனர். விஜய்யை பார்க்க பிரதான சாலைகளில் மக்கள் திரண்டதால், அனைத்து பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து காந்திமார்க்கெட் மரக்கடை பகுதி சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது. வழக்கமாக இந்த தூரத்தை 20 நிமிடங்களில் கடந்து சென்று விடலாம். நேற்று காலை 9.30 மணிக்கு விஜய்யின் பிரசார வாகனம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
ஆனால் தொண்டர்கள் வெள்ளத்தில் அவரது பிரசார வாகனம் மெதுவாக ஊர்ந்து வந்ததால், மதியம் 2.30 மணிக்கு பிரசார இடமான காந்திமார்க்கெட் எம்.ஜி.ஆர். சிலை அருகே வந்தது. இதன் மூலம் சுமார் 7 கி.மீ. தொலைவிலான தூரத்தை கடக்க கிட்டத்தட்ட 5 மணி நேரம் ஆனது குறிப்பிடத்தக்கது. பின்னர் அங்கு பரப்புரை மேற்கொண்ட விஜய், திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது விஜய் பரப்புரை குறித்த கேள்விக்கு பதில் அளித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-
இசை இறைவனாக இளையராஜாவை பார்க்கிறோம். சச்சினுக்கு விருது தரும்போது இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது கொடுப்பதில் எங்களுக்கு பெருமை தான்.
திரையில் பார்த்த நடிகரை நேரில் பார்க்க கூட்டம் வரத்தான் செய்யும் ரஜினி, அஜித், நயன்தாரா வந்தாலும் விஜய்க்கு வரும் கூட்டத்தைவிட அதிக கூட்டம் வரும்.
இலங்கை, வங்கதேசம், நேபாளத்தில் வந்த நிலை நமக்கு வராது என்று யாராவது உறுதி தர முடியுமா? .. பக்கத்து வீட்டு கூரை தான் எரிகிறது என்று படுக்க போனால் விழுகிறது உங்கள் சாம்பல் ஆக தான் இருக்கும். தன் வீட்டு கூரை எரியாத வரை நீங்கள் தண்ணீர் எடுத்து வர தயாராக இல்லை. பக்கத்து வீட்டு கூரை தான் எரிகிறது என்று ஆனந்தத்தில் தூங்க போகிறீர்கள். பார்க்க நீங்கள் இருக்க மாட்டீர்கள். உங்கள் சாம்பல் தான் இருக்கும். எச்சரிக்கையாக இருங்கள். இப்பொழுது நான் பேசுகிறது வேடிக்கையாக தான் இருக்கும்.
நீங்கள் மலையை வெட்டி, கல்லாக்கி உங்கள் பிள்ளைக்கு பெரிய வீட்டை கட்டி வைத்து போக வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நான் இந்த நாட்டை எனது பிள்ளைகளுக்கு வாழ்வதற்கு வைத்துவிட்டு போக வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் காசு சேர்த்து வைத்துவிட்டு போக வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நான் சுவாசிக்க நல்ல காற்றை சேர்த்து வைத்து விட்டு சாக வேண்டும் என்று நினைக்கிறேன்
இவ்வாறு அவர் கூறினார்.






