கோரிக்கையை உரிய நேரத்தில் நிறைவேற்றியிருந்தால் ஒரு ஆசிரியரின் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம் - டி.டி.வி. தினகரன்


கோரிக்கையை உரிய நேரத்தில் நிறைவேற்றியிருந்தால் ஒரு ஆசிரியரின் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம் - டி.டி.வி. தினகரன்
x

கோப்புப்படம் 

சாலை விபத்தில் உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

சென்னை

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த ஜூலை 8-ம் தேதி சென்னையில் பகுதிநேர ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பும் வழியில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் பார்த்தசாரதி சாலை விபத்தில் மரணமடைந்ததாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.

சாலை விபத்தில் மரணமடைந்த பகுதிநேர ஆசிரியர் பார்த்தசாரதியை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக ஆசிரியர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் போனஸ், ஊக்கத்தொகை, மருத்துவக் காப்பீடு, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட எந்தவித சலுகையுமின்றி பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தேர்தல் அறிக்கையில் 181-வது வாக்குறுதியாக அளித்த தி.மு.க., ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்தும் அதனை நிறைவேற்ற தொடர்ந்து மறுத்துவருவது கடும் கண்டனத்திற்குரியது.

தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக உடற்கல்வி, தையல், கணினி அறிவியல் என பல்வேறு பாடங்களை கற்பித்து மாணவர்களின் தரத்தை உயர்த்தும் பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கையை உரிய நேரத்தில் நிறைவேற்றியிருந்தால், தொடர் போராட்டங்களையும், ஆசிரியர் ஒருவரின் உயிரிழப்பையும் தவிர்த்திருக்கலாம் என சக ஆசிரியர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும், பணி நிரந்தரம் என்ற நீண்ட கால கோரிக்கைக்கு தி.மு.க. அரசு செவிசாய்க்காத காரணத்தினால், தற்போது உயிரிழந்த ஆசிரியர் பார்த்தசாரதியின் மறைவுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணமும், பணப்பலன்களும் இன்றி அவரது குடும்பம் நிர்கதியில் நிற்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

எனவே, சாலை விபத்தில் உயிரிழந்த ஆசிரியர் பார்த்தசாரதியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற சக ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதோடு, பகுதிநேர ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையை மனசாட்சியோடு அணுகி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story