வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள் கமல்ஹாசன் உறுதி

மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று இறுதி கட்ட பிரசாரத்தின் போது கமல்ஹாசன் தெரிவித்தார். அதற்கான உத்தரவாத கடிதத்தை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன்பு கமல்ஹாசன் வைத்து உறுதி அளித்தார்.
வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள் கமல்ஹாசன் உறுதி
Published on

சென்னை,

மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் நேற்று மாலை 4.30 மணிக்கு சென்னை கலங்கரை விளக்கம் அருகே இறுதி கட்ட பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகம் சாக்கடை ஆகி கொண்டு இருக்கிறது. அதில் வாழும் புழுக்களாக நாங்கள் இருக்க மாட்டோம். சாக்கடை என்ற சிறிய குட்டை சிலருக்கு பழகி இருக்கலாம். நாம் அதை பழகி விடக்கூடாது. தற்போது தமிழகத்தில் தண்ணீரை விற்று கொண்டிருக்கிறார்கள். நாளை, காற்றையும் கூட அவர்கள் விற்பார்கள்.

எனக்கு இருக்கும் கோபம், பயம் இவையெல்லாம் தான் என்னை உந்தி தள்ளியது. களத்தில் இறங்க தைரியம் இருக்கிறதா? என்று தைரியம் கொடுத்ததே அவர்கள் தான்.

சிறு கூட்டம் இவர்களை நசுக்கி விடலாம் என்று வெள்ளையனும் நினைத்தான், இந்த கொள்ளையர்களும் நினைக்கிறார்கள். அவர்களும் வெளியேறினார்கள். இவர்களும் வெளியேறுவார்கள். வெளியேற்றும் நாள் நெருங்கி விட்டது. ஜல்லிக்கட்டுக்காக போராடிய நமது மக்களை நசுக்கியவர்கள் டெல்லியிலும் இருக்கிறார்கள். இதே நேர்கோட்டில் உள்ள கோட்டையிலும் இருக்கிறார்கள். இதையெல்லாம் நாம் மறந்து விடக்கூடாது.

இங்கு வாரிசு அரசியல் விளையாடிக்கொண்டிருக்கிறது. என்னை பொறுத்தமட்டில் மக்கள் தான் எனது வாரிசு. மக்கள் தான் எனது குடும்பம். இந்த தேர்தலின் தீர்ப்பு டெல்லி வரை எதிரொலிக்க வேண்டும். கஜா புயலின் போது தென்னை மரம் தான் சாய்ந்து விட்டது என்று டெல்லியில் இருப்பவர்கள் வரவில்லை. பலரது வாழ்க்கையே சாய்ந்து விட்டது என்பதை ஏன் அவர்கள் அறியவில்லை?. இங்கு இருப்பவர் கள் பயத்தினால் ஹெலிகாப்டரில் சென்று திரும்பினர்.

தமிழகத்துக்கு குடிநீர் வேண்டும். குடிசையில்லா தமிழகம் வேண்டும். அதற்கான திட்டங்களை வகுத்து கொண்டிருக்கிறோம். ஆணுக்கு பெண்ணுக்கும் சமமான கூலி வேண்டும். ஏற்கனவே சட்டத்தில் இருப்பது தானே என்பார்கள். ஏன் நடக்கவில்லை. விண்வெளி ஆகட்டும். விவசாயம் ஆகட்டும். பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.

மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பின்னர், வாக்குறுதியை நிறைவேற்றா விட்டாலும் சரி, உங்கள் திருப்திக்கு ஏற்ப செயல்படாவிட்டாலும் சரி அதுகுறித்து ஆதாரத்தோடு புகாராக பொதுமக்கள் அளிக்கலாம். அந்த புகார் விசாரிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் அது நிரூபிக்கப்பட்டால் அவர்களது ராஜினாமா உங்கள்(மக்கள்) கையில் வழங்கப்படும். (இவ்வாறு அவர் பேசிய போது மக்கள் நீதி மய்யத்தின் நாடாளுமன்ற வேட்பாளர்கள் மவுரியா(வடசென்னை), கமீலாநாசர்(மத்திய சென்னை), ரெங்கராஜன்(தென்சென்னை), ஸ்ரீதர்(ஸ்ரீபெரும்புதூர்), பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பிரியதர்ஷினி, பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஜெகதீஷ் குமார் ஆகியோர் ராஜினாமா தொடர்பாக அளித்த உத்தரவாத கடிதத்தை கமல்ஹாசன் கையில் தூக்கி காண்பித்தார்). இவ்வாறு அவர் பேசினார்.

இதன்பின்பு, அங்கு கூடியிருந்த மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுடன் கமல்ஹாசன் திறந்த வேனில் நின்றபடி காந்தி சிலையை நோக்கி ஊர்வலமாக சென்றார். பின்னர், சென்னையை சுற்றி உள்ள தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் 6 பேர் வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வோம் என்ற உத்தரவாத கடிதத்தை கமல்ஹாசன் முன்னிலையில் காந்தி சிலை முன்பு வைத்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதைத்தொடர்ந்து அந்த கடிதத்தை அவர்கள் கமல்ஹாசனிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் ஸ்ரீபிரியா, கோவை சரளா, சுவராஜ் இந்தியா கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com