பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தால் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள்

திருக்கோவிலூரில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ள நிலையில் பொது அமைதிக்கு யாரேனும் பங்கம் விளைவித்தால் போலீசார் இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவார்கள் என சூப்பிரண்டு மோகன்ராஜ் கூறினார்.
பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தால் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள்
Published on

திருக்கோவிலூர்

விநாயகர் சிலை ஊர்வலம்

விநாயகர் சதுர்த்தி விழா முடிந்ததை முன்னிட்டு இன்று(புதன்கிழமை) திருக்கோவிலூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடக்கிறது. முன்னதாக காலை 10 மணிக்கு திருக்கோவிலூர் 5 முனை சந்திப்பில் இருந்து தொடங்கும் இந்த ஊர்வலம் கிழக்குதெரு, தெற்கு தெரு ஏரிக்கரை மூலை, மேலவீதி பஸ் நிலையம், ஹாஸ்பிடல் ரோடு வழியாக தென்பெண்ணை ஆற்று மேம்பாலத்தை கடந்து விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் உள்ள அழகானந்தல் ஏரியை சென்றடைகிறது. இந்த நிலையில் விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் சிலை கரைக்கும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் நேற்று திருக்கோவிலூருக்கு வந்தார். பின்னர் அவர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசாருடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

வீடியோ பதிவு

அப்போது விநாயகர்சிலை ஊர்வலம் தொடங்குவது முதல் சிலைகளை கரைக்கும் வரை அனைத்து நிகழ்வுகளையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும், ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை. பள்ளிவாசல் மற்றும் தேவாலயங்கள் உள்ளிட்ட பிற மத கோவில்கள் முன்பு மேளம் அடிக்கவும் கூடாது. ஊர்வலம் செல்லும் போது போக்குவரத்துக்கு எந்தவித இடையூறு இன்றி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

ஊர்வலம் கரைக்கும் இடத்தை சென்றடைந்ததும் சிலை கரைக்கும் குழுவினரிடம் சிலைகளை ஒப்படைக்க வேண்டும். சிலை கரைக்கும் நிகழ்ச்சி அதிகபட்சமாக மாலை 3 மணி அல்லது 4 மணிக்குள் முடித்திட வேண்டும். ஊர்வலத்தின் போதும், சிலை கரைக்கும் இடத்திலும் ஆம்புலன்ஸ் வாகனம் தயார் நிலையில் இருக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரும்பு கரம் கொண்டு

சிலை அமைப்பாளர்களும் ஊர்வலத்தில் வருபவர்களும் போலீசாருக்கு தகுந்த ஒத்துழைப்பு தர வேண்டும். விநாயகர் சிலை ஊர்வலத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நோக்கத்திலோ அல்லது ஊர்வலத்தில் ஏதேனும் தகராறு செய்யும் எண்ணத்திலோ யாரேனும் ஈடுபட நினைத்தால் காவல்துறையினர் இரும்பு கரம் கொண்டு அடக்குவார்கள் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவா கூறினார்.

தொடர்ந்து அவர் சிலைகள் கரைக்கப்படும் அரகண்டநல்லூர் அழகானந்தல் ஏரியை பார்வையிட்டார். அப்போது திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார், இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com