"விஜய் தனித்து நின்றால் தவெக அழிந்துவிடும்" - ராஜேந்திர பாலாஜி


விஜய் தனித்து நின்றால் தவெக அழிந்துவிடும் - ராஜேந்திர பாலாஜி
x

விஜய் திமுகவை எதிர்ப்பது உண்மையாக இருந்தால், அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

விருதுநகர்,

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் திருச்சியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய விஜய், நேற்று நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மக்களைச் சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

திமுகவை தனது அரசியல் எதிரி என்றும், பாஜக-வை தனது கொள்கை எதிரி என்றும் கூறி வரும் தவெக தலைவர் விஜய் தனது முதல் அரசியல் மாநாடு முதல் தற்போதைய தேர்தல் பரப்புரையிலும் செல்லும் இடமெல்லாம் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - தவெகவிற்கும்தான் போட்டி என்று மீண்டும் மீண்டும் பதிவு செய்து வருகிறார்.

இந்தநிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார். விஜய் பாஸ் மார்க் வாங்க வேண்டும் என்று சொன்னால் எடப்பாடியார் தலைமையில் இருக்கின்ற அதிமுகவோடு கூட்டணி வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக விருதுநகரில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

விஜய் தனித்து நின்று ஜெயிப்போம் என்று கூறுவது இந்த காலத்தில் மட்டுமல்ல எந்த காலத்திலும் நடைபெறாத ஆசை. அவர் முயற்சி எல்லாம் வீணாகும். விஜய் தனித்து நின்று களம் காண்போம் என்று கூறுவது திமுகவிற்கு வலு சேர்க்கும் விதமாகத்தான் தமிழக மக்கள் பார்ப்பார்கள். அந்த நேரத்தில் திமுகவிற்கு மாற்றாக அதிமுகவை தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

விஜய் தனித்து நின்று போட்டியிட்டால் திமுக தமிழக வெற்றிக் கழகத்தை அழித்துவிடும். விஜய்க்கு கூடும் கூட்டம் எல்லாம் வாக்குகளாக மாறாது. விஜய் நடிகர் என்பதால் அவரைப் பார்க்க நாங்கள் கூட செல்வோம். அஜித், சூப்பர் ஸ்டார் சார் ரஜினிகாந்த் வந்தால் விஜய்க்கு வரும் கூட்டத்தை விட இருமடங்கு கூட்டம் அதிக அளவில் வரும்.

தேர்தல் களத்தில் திமுக தவெகவிற்கு மட்டுமே போட்டி என விஜய் கூறுவது உண்மைதான், இரண்டாவது இடத்திற்கு இரு கட்சிகளுக்கு போட்டி என்பதை விஜய் சொல்கிறார். களத்தில் அதிமுகதான் வெற்றி பெறும். விஜய் திமுகவை எதிர்ப்பது உண்மையாக இருந்தால், திமுக ஆட்சியை தூக்கி எறிவேன் என்று விஜய் சொல்வது உண்மையாக இருந்தால் அவர் அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும்.

விஜய் தனித்து நின்றால் தவெக அழிந்துவிடும். விஜய் பாஸ் மார்க் வாங்க வேண்டும் என்று சொன்னால் எடப்பாடியார் தலைமையில் இருக்கின்ற அதிமுகவோடு கூட்டணி வைக்க வேண்டும். இல்லையென்றால் இந்த தேர்தலோடு விஜயை திமுக முடித்து விடும். விஜய் நன்றாக யோசித்து அதிமுக கூட்டணிக்கு வரவேண்டும். அதிமுகவின் பலம் மற்றும் அரசியல் அனுபவம் விஜய்க்குத் தேவை. நடிகர் என்ற பிம்பம் மட்டுமே வாக்குகளைப் பெற்றுத் தராது என்றும், சினிமா வேறு, அரசியல் என்பது வேறு எனத் தெரிவித்தார்.

1 More update

Next Story