

கோவையை அடுத்த சூலூர் அண்ணா கலையரங்கில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசும்போது கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தலை வழக்கமான தேர்தலாக எளிதில் கடந்து போகக் கூடாது. 50 ஆண்டுகளாக இரண்டு திராவிட கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. இந்த ஆட்சி முறையில் என்ன மாற்றம் வந்துள்ளது? மக்கள் என்ன முன்னேற்றம் அடைந்துள்ளனர்? என்பதை ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.
சட்டமன்ற தேர்தலை மாற்றத்துக்கான களமாக எண்ணி அணுகுங்கள். சாதி பார்த்து வாக்களிக்க வேண்டும் என்றால் எங்களுக்கு வாக்களிக்க வேண்டாம். நாங்கள் சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் வாக்களியுங்கள். உலகத்தரமான கல்வியை தமிழகத்திற்கு கொடுத்து மாற்றத்தை ஏற்படுத்துவோம். மருத்துவம் மகத்தான சேவை. பாகுபாடின்றி சமமாக அனைவருக்கும் கொடுப்போம். தண்ணீர் விற்பனைப் பொருள் அல்ல.
அதை விற்றால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை கொடுப்போம். தடையின்றி கியாஸ் சிலிண்டர் கொடுப்போம். 10 ஆண்டுகள் பசுமை திட்டம், பல கோடி பனைமரம் நடும் திட்டம் கொண்டு வந்து படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை கொடுப்போம். நடிகரை நம்பி நாட்டை கொடுத்துவிட்டு திரிய வேண்டாம்” என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ``வீண் செலவுகளால் தமிழக மக்களை கடனாளிகள் ஆக்குவதை ஏற்க முடியாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முந்தைய அரசின் கடன்களை திருப்பிச் செலுத்த மாட்டோம்” என்றார்.