"வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாக சேர்த்தால்.. " - திருமாவளவன் எம்.பி. கூறியது என்ன..?


வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாக சேர்த்தால்..  - திருமாவளவன் எம்.பி. கூறியது என்ன..?
x

கோப்புப்படம்

பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் உள்ளதாக திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ரோஷனை பகுதியில் திருமாவளவன் எம்.பி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பீகாரில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடியினர் போன்ற மக்களின் வாக்குகளை நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.

ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கோருகிறார்கள். சி.ஏ.ஏ. சட்டத்தை நடைமுறைப்படுத்துகிற நடவடிக்கையாக தேர்தல் ஆணையம் இதனை சோதனை முறையில் மேற்கொள்கிறது என்கிற ஐயம் எழுந்துள்ளது. இது பற்றி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிப்பதற்கு மத்திய அரசு தயாராக இல்லை. அதனால் இரு அவைகளையும் தள்ளிவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை பிற மாநிலங்களிலும் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. அதில் தமிழ்நாட்டிலும் விரைவில் சட்டமன்ற தேர்தல் வர உள்ள சூழலில் இந்த தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கை தமிழக வாக்காளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற சூழல் உள்ளது. குறிப்பாக வடமாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் வேலை செய்து வருகின்ற பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கானோர் உள்ளனர்.

அவர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் முயற்சி இருப்பதாக தெரிவதால் பா.ஜனதாவுக்கு எதிராக வாக்களிக்கக்கூடிய சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளின் வாக்குகளை நீக்குவதற்குரிய முயற்சிகளும் மேற்கொள்ளப்படலாம் என்கிற ஐயம் எழுந்துள்ளது.

ஆகவே இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் மூலம் தீர்வை எதிர்பார்க்கும் அதே வேளையில் அரசியல் கட்சிகள் அனைவரும் ஒருங்கிணைந்து தேசிய அளவில் இதற்கு எதிராக போராட வேண்டிய தேவை எழுந்துள்ளது. எனவே இதுகுறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இதனை எதிர்கொள்வதற்குரிய நல்ல முடிவை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். லட்சக்கணக்கான வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாக தமிழகத்தில் சேர்த்தால் தமிழ்நாட்டின் அரசியல் தலைகீழாக மாறிப்போகும்.

எனவே எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ்நாட்டில் வாக்குரிமை இல்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும். தமிழக முதல்-அமைச்சர், துணிந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.

இவ்வாறு திருமாவளவன் எம்.பி. கூறினார்.

1 More update

Next Story