

சென்னை,
கந்தர் மலையை ‘சிக்கந்தர்’ மலையாக மாற்றத் துடிக்கிறதா இந்துசமய அறநிலையத் துறை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
வரும் மஹா கார்த்திகை தீபத் திருநாளன்று, திருப்பரங்குன்றத் தீபத்தூணில் தீபமேற்றலாம் என்ற சுப்ரீம்கோர்ட்டு உத்தரவை, ‘மறு ஆய்வு’ செய்ய வேண்டுமெனக் கோரி சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கும் த.வெ.க. அரசின் இந்துவிரோதப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
முருகப்பெருமானின் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றத்தில், கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு, ஜோசப் விஜய் அவர்கள் ஏன் இத்தனை பதறுகிறார்? சுப்ரீம்கோர்ட்டு உத்தரவினை மதித்து, பிற அமைப்புகள் எல்லாம் அமைதி காக்கையில், தவெக அரசு மட்டும் எதற்கு இப்படி முந்திக்கொண்டு மறு ஆய்வு மனு தாக்கல் செய்கிறது? கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய இந்துசமய அறநிலையத் துறையே, கந்தர் மலையை ‘சிக்கந்தர்’ மலையாக மாற்றத் துடிக்கிறதா? வாக்கு வங்கி அரசியலுக்காக ஜோசப் விஜய் அவர்கள் இந்தளவிற்கு தரம் தாழ்ந்து போக வேண்டுமா?
அதுமட்டுமன்றி, திருப்பரங்குன்றத் தீபத்தூணில் தீபம் ஏற்றக் கூடாது என நீதிமன்றங்களில் தொடர்ந்து மனுத் தாக்கல் செய்து வரும் தவெக அரசு, அரசுத் தரப்பு வழக்கறிஞர்களுக்கு செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயும் பொதுமக்களின் வரிப்பணம் என்பதை மறந்து விடக்கூடாது! தன் கையை வைத்து தன் கண்களையே குத்துவது போல, முருக பக்தர்களின் பணத்தை கொண்டே அவர்களின் வழிபாட்டு உரிமைக்கு எதிராக வாதிடும் ஜோசப் விஜய் அவர்களுக்கு ஒருபோதும் மன்னிப்பே கிடையாது!
எனவே, ‘அனைவருக்குமான ஆட்சி’ என்று கூறிக் கொண்டு, முருக பக்தர்களின் வழிபாட்டு உரிமைகளை திட்டமிட்டு பறிக்கும் ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான இந்துவிரோத அரசுக்கு, முருக பக்தர்கள் கூடிய விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.