பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்றால் பதவி விலகுங்கள் - நயினார் நாகேந்திரன்

உங்கள் ஆட்சியில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களை இதுவரை நேரில் சென்று சந்திக்காதது ஏன்? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

நேற்று ஒருநாளில் மட்டும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குழந்தைகள், பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவி, கர்ப்பிணி பெண், தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட 12 பேருக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதும் அதில் 3 வயது குழந்தை அநியாயமாக இறந்து போனதும் பற்றி ஏதாவது உங்களுக்கு தெரியுமா? 24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் எனில், உங்கள் ஆட்சியில் சராசரியாக 2 மணி நேரத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டிருக்கிறது என்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு?

இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் உங்களுடன் திரையில் நடித்த நடிகர், நடிகைகளையும், உங்களை வைத்து திரைப்படம் இயக்கிய இயக்குநர்களையும் வரிசையாக சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்வதுதான் உங்கள் மாற்று அரசியலா முதல்வரே? தினசரி பல சினிமா பிரபலங்களை சந்திக்கும் நீங்கள், உங்கள் ஆட்சியில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களை இதுவரை நேரில் சென்று சந்திக்காதது ஏன்? பாதிக்கப்பட்டவர்கள் பனையூருக்கு வந்தால் தான் உங்கள் தரிசனம் கிடைக்குமோ?

முதல்வரான பின்னும் நடிகர் மனநிலையிலேயே தொடரும் உங்கள் பந்தாவிற்கு, எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் எதற்கு பலியாக வேண்டும்? உங்களை நம்பி வாக்களித்த பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்றால், பதவி விலகுங்கள் ஜோசப் விஜய் அவர்களே! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com