விபத்தில் பலியானால், மகனுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த அரசு நிவாரணம் கிடைக்கும் என எண்ணி பஸ் முன் பாய்ந்து தாயார் தற்கொலை

மகனை படிக்க வைக்க முடியவில்லை என்ற சோகத்தில் தன் உயிரை துச்சமென நினைத்து தாய் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் பலியானால், மகனுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த அரசு நிவாரணம் கிடைக்கும் என எண்ணி பஸ் முன் பாய்ந்து தாயார் தற்கொலை
Published on

சேலம்:

சேலம் கலெக்டர் அலுவலகம் பின்பகுதியில் உள்ள மறைமலை அடிகள் தெருவைச் சேர்ந்தவர் பாப்பாத்தி (46). இவர் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். கணவரை இழந்த இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த மாதம் 28ம் தேதி காலை, 2வது அக்ரஹாரம் பகுதியில், தனியார் பஸ் மோதியதில் பாப்பாத்தி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

அப்பகுதியில் உள்ள சிசிடிடி கேமராவை ஆய்வு செய்த போது, சம்பவம் நடப்பதற்கு முன்னதாக, டவுன் பகுதியில் இருந்து சென்ற பஸ்சில் விழுவதற்காக பாப்பாத்தி ஓடி சென்று உள்ளார். திடீரென குறுக்கே வந்த டூவீலர் அவர் மீது மோதியதில் பாப்பாத்தி கீழே விழுந்ததும், அதன் பிறகு 2வதாக வந்த பஸ்சின் முன்பு ஓடிச்சென்று, விழும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதனால், அவர் திட்டமிட்டு தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்துடனே, ஓடி பஸ் முன்பு பாய்ந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் உருக்கமான தகவல் வெளியானது.

மகள் கல்லூரி படிப்பை முடித்த நிலையில், மகன் தற்போது கல்லூரியில் படித்து வருகிறார். அவரது மகனுக்கு கல்லூரி கட்டணம் ரூ.45 ஆயிரம் செலுத்தும்படி கல்லூரி நிர்வாகம் கூறியிருந்தது. ஆனால், அந்த பணத்தை அவரால் கட்ட முடியவில்லை. இதற்காக அக்கம்பக்கம் இருந்தவர்களிடம் கடன் கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு யாரும் பணம் கொடுத்து உதவவில்லை.

இதனால் மனமுடைந்த நிலையில் அவர் காணப்பட்டு உள்ளார். அப்போது யாரோ சிலர் தூய்மை பணியாளராக பணிபுரிவதால் விபத்தில் உயிரிழந்தால் மரணத்தின் மூலம் அரசு நிவாரண தொகை கிடைக்கும், மகன் படிப்புக்கு உதவி கிடைக்கும் அல்லது கருணை அடிப்படையில்  வேலை மகனுக்கு கிடைக்கும் என கூறி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பாப்பாத்தி ஓடும் பஸ்சில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தன் மகனை படிக்க வைக்க முடியவில்லை என்ற சோகத்தில் தன் உயிரை துச்சமென நினைத்து தாய் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com