ஐ.ஜி. மீது கிரிமினல் வழக்குபதிவு செய்ய சி.பி.சி.ஐ.டி.க்கு ‘விசாகா’ கமிட்டி பரிந்துரை

ஐ.ஜி. மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி.க்கு ‘விசாகா’ கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.
ஐ.ஜி. மீது கிரிமினல் வழக்குபதிவு செய்ய சி.பி.சி.ஐ.டி.க்கு ‘விசாகா’ கமிட்டி பரிந்துரை
Published on

சென்னை,

தமிழக போலீஸ்துறையில் பணியாற்றும் ஐ.ஜி. மீது அவருக்கு கீழ் பணியாற்றிய பெண் போலீஸ் சூப்பிரண்டு பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார்.

பூட்டிய அறைக்குள் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார். அவரை பணி இடமாற்றம் செய்து, கிரிமினல் வழக்கில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி. அலுவலகத்தில் அவர் பரபரப்பு புகார் அளித்தார்.

அரசு துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையிலான கமிட்டியிடமும் புகார் அளித்தார்.

அதன்பேரில் பெண் போலீஸ் சூப்பிரண்டு புகார் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதையடுத்து பெண் போலீஸ் சூப்பிரண்டு புகாருக்குரிய ஆதாரங்களுடன் விசாகா கமிட்டி முன்பு கடந்த 29-ந்தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.

இந்தநிலையில் பெண் போலீஸ் சூப்பிரண்டு புகாரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு விசாகா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

இதுதொடர்பாக விசாகா கமிட்டி தலைவரான கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

பெண் போலீஸ் சூப்பிரண்டு குற்றம் சாட்டி உள்ள ஐ.ஜி.யை பணி இடமாற்றம் செய்வதற்கும், அவர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு பதிவு செய்வதற்கும் விசாகா கமிட்டிக்கு உரிய அதிகாரம் இல்லை. எனவே புகாரின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு, இவ்விவகாரம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.

புகாருக்கு உள்ளான ஐ.ஜி. மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விசாகா கமிட்டியை கலைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஐ.ஜி. மீதான பாலியல் புகாரை விசாகா கமிட்டி முழுவதுமாக விசாரிக்காமல் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு பரிந்துரை செய்திருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com