

சென்னை,
சட்டமன்றத்தில் நேற்று நடந்த பட்ஜெட் உரையை புறக்கணித்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதுதொடர்பாக சட்டமன்ற வளாகத்தில் தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், காவிரி மேலாண்மை வாரியம் இன்றுவரை அமைக்கப்படவில்லை. அதற்கான முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபடவில்லை. இது சம்பந்தமாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோரை டெல்லிக்கு அழைத்து சென்று, பிரதமர் மோடியை சந்தித்து அழுத்தம் தர வேண்டுமென்ற தீர்மானம், அதில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அதன் அடிப்படையில், பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளின் தலைவர்களையும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை சந்திக்கவும், நேரம் ஒதுக்கவும் இதுவரை முன்வரவில்லை. அதற்கான முயற்சியில் குதிரை பேர அரசும் ஈடுபடவில்லை என்பது வெட்கத்துக்குரியது.
புறக்கணித்தது ஏன்?
அங்கிருக்கின்ற நீர்வளத்துறையின் செயலாளர், ஸ்கீம் என்று குறிப்பிடப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார். அதையும் கூட இங்கு குதிரை பேர ஆட்சி நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமி கண்டிக்கவில்லை.
ஒரு கடிதம் கூட எழுதவில்லை என்பது வெட்கப்பட வேண்டியதாக, வேதனைப்பட வேண்டிய செயலாக அமைந்திருக்கிறது. இந்தநிலையில், இன்றைக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகின்ற நேரத்தில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்திட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்த முன்வராத காரணத்தால், நிதி அமைச்சர் நிதிநிலை அறிக்கையை(பட்ஜெட்) படிக்கின்ற நேரத்தில், தி.மு.க. சார்பில் கண்டனத்தை பதிவு செய்யும் வகையில், அதனைப் புறக்கணித்து, வெளிநடப்பு செய்திருக்கிறோம்.
கருப்பு உடை
அதுமட்டுமின்றி, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எங்களுடைய கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறோம்.
இங்கு சட்டமன்றத்தில் மட்டுமல்ல, நாடாளுமன்ற மேலவையில் உள்ள எங்களுடைய உறுப்பினர்கள் 4 பேரும், எங்களுடைய கண்டனத்தை அங்கு பதிவு செய்யும் வகையில், கருப்பு உடை அணிந்து பங்கேற்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.