இளையராஜா பிறந்தநாள்: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து


இளையராஜா பிறந்தநாள்: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
x
தினத்தந்தி 2 Jun 2025 1:47 PM IST (Updated: 2 Jun 2025 4:27 PM IST)
t-max-icont-min-icon

இசைஞானி இளையராஜா இன்று தனது 82-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

சென்னை,

தேனி மாவட்டத்திலுள்ள பண்ணைப்புரம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் இளையராஜா. 1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில், வெளியான 'அன்னக்கிளி' படத்தின் மூலம்தான் தனது இசைப்பயணத்தை தொடங்கினார் இசைஞானி இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் 7,000 பாடல்களை எழுதி உள்ளார்.

இவர் 2010-ம் ஆண்டு பத்ம பூஷன் விருதையும் 2018-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருதையும் பெற்றார். இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட உள்ளது. ஆசியாவிலேயே முதல் முறையாக "சிம்பொனி" இசை அமைத்தவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இந்த நிலையில், இசைஞானி இளையராஜா இன்று தனது 82-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், இசைஞானி இளையராஜாவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

"தமிழ் இசை ரசிகர்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்திட்ட இசையின் உச்சமான இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள். "அன்னக்கிளி உன்னை தேடுது" என்று ஆரம்பித்து, "தினம் தினமும் உன் நினைப்பு" வரை தொடரும் உங்கள் இசை மெட்டுகள், மென்மேலும் தமிழ் மக்களின் உள்ளங்களை வென்றிட வாழ்த்துகிறேன்." இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில்;

"உலகம் முழுவதும் இசை இராஜாங்கம் நடத்தி வரும் இசைஞானி இளையராஜா அவர்களின் 82-ஆம் பிறந்த நாளில் அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இசையால் மக்களை வாழ வைக்கும் அவர் நூறாண்டு வாழ பிரார்த்திக்கிறேன்." இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்;

"சுமார் ஐம்பது ஆண்டுகளாக, நான்கு தலைமுறைகள் கடந்து, இசையுலகை ஆண்டு வரும் நமது இசைஞானி, பாராளுமன்ற உறுப்பினர், இளையராஜா அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாடு, மொழி, வயது என்ற எல்லைகள் எல்லாம் கடந்து, உலக அளவில் இசையால் தனக்கென ஒரு தனி இடம் பிடித்திருக்கும் பத்மவிபூஷன் இளையராஜா அவர்கள், நூறாண்டுகளுக்கும் மேல் நலமுடன் வாழவும், மேலும் பலப்பல தலைமுறைகளை தனது இசையால் ஆற்றுப்படுத்தவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்;

"கிராமிய இசையில் தொடங்கி மேற்கத்திய சிம்பொனி இசை வரை, தலைமுறைகள் பல கடந்து இசை உலகின் ஈடு இணையற்ற மாமேதையாக திகழ்பவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான இசைஞானி 'பத்ம விபூஷண்' இளையராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்த தேசமும் பெருமைப் படும் அளவிற்கு இசை உலகின் ராஜாதி ராஜாவாக வலம் வரும் திரு.இளையராஜா அவர்கள் பூரண உடல் நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் மேலும் பல சாதனைகள் படைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்." இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story