யானை வழித்தடத்தில் விதிமீறிய தங்கும் விடுதிகள்... 12 கட்டிடங்கள் அகற்றம்

மசினகுடி அருகே சீகூர் யானை வழித்தடம் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது.
யானை வழித்தடத்தில் விதிமீறிய தங்கும் விடுதிகள்... 12 கட்டிடங்கள் அகற்றம்
Published on: 

ஊட்டி,

மசினகுடி அருகே யானை வழித்தடத்தில் விதிமீறிய 12 கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது.

யானை வழித்தடம்

தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா ஆகிய 3 மாநில வனப்பகுதிகளை கடக்கும் காட்டு யானைகளின் இடப்பெயர்வுக்கு, நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை உள்ளடக்கிய மசினகுடி அருகே சீகூர் யானை வழித்தடம் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது.

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் யானை வழித்தடத்தில் அனுமதியற்ற தங்கும் விடுதிகள், விதிமீறிய கட்டிடங்கள், உணவகங்கள் போன்றவை அதிகரித்திருப்பதால் யானைகளின் வலசைப்பாதைகள் தடைபட்டு இருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி கோட்டத்தில் உள்ள சீகூர் யானைகள் வழித்தடம் தொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டு வரைபடத்துடன் கூடிய அரசாணை வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து தங்கும் விடுதி உரிமையாளர்கள் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

2018-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் சீகூர் யானை வழித்தடம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது. மசினகுடி பொக்காபுரம், வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 309 அறைகள் கொண்ட 39 கட்டிடங்கள் யானைகள் வழித்தடங்களில் கட்டப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிக்கை சமர்ப்பித்தது. இதைத்தொடர்ந்து அந்த அறிக்கையில் தெரிவித்த கட்டிடங்களுக்கு சீல் வைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 39 கட்டிடங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.

கட்டிடங்கள் அகற்றம்

அதன்பின், யானை வழித்தடம் தொடர்பாக எழுந்த பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட் டது. இந்த குழு, சீல் வைக்கப்பட்ட கட்டிடங்களை பலமுறை ஆய்வு செய்து, விதிமீறி மற்றும் அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டிட உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டது. இந்தநிலையில், ஒரு விடுதியில் உள்ள 11 கட்டிடங்கள், மற்றொரு விடுதியில் ஒரு கட்டிடம் என 12 கட்டிடங்கள் போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் உதவியுடன் நேற்று முன் தினம் இடித்து அகற்றப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com