கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிக்கப்படும்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி

கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிக்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உறுதி அளித்தார்.
ஆதவ் அர்ஜூனா
Published on

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தலைமை தாங்கினார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது:-

கல்வராயன்மலை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏராளமான கள்ளச்சாராய உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன. கல்வராயன்மலை பகுதி மக்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு துறை சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. கல்வராயன்மலையில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க புதிய போலீஸ் சூப்பிரண்டு, சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிக்கப்படும். மேலும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். மதுபழக்கத்தில் இருந்து விலகி விளையாட்டிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

போட்டித் தேர்வுகள்

சமூகத்தில் கல்வியில் பின்தங்கிய நிலையில் கல்வராயன்மலை உள்ளது. கல்வராயன்மலையில் உள்ள இளைஞர்கள் உயர்கல்விக்கு செல்வது கிடையாது. முதல்-அமைச்சரின் குறிக்கோள் போதை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பது தான். குழந்தை திருமணங்கள் ஏதேனும் நடைபெற்றால் அதனை கண்டறிந்து முற்றிலுமாக தடுத்திடவும் உரிய நடவடிக்கை மெற்கொள்ளப்படும். கள்ளக்குறிச்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட மைய நூலகத்தில் மாணவர்கள், யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட அரசு போட்டித் தேர்வுகள் எழுதுபவர்களும் பயன்பெறும் வகையில் தனியாக ஒரு தளம் அமைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு பயிற்சி வகுப்பு நடத்தும் நிறுவனங்களுடன் கலந்துரையாடி பயிற்சி வகுப்புகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com