"ஊழல் புகார் பற்றி விவாதிக்க நான் ரெடி, நீங்கள் ரெடியா?" - முதலமைச்சர் பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் சவால்

ஊழல் புகார் பற்றி விவாதிக்க நான் ரெடி, நீங்கள் ரெடியா என்று முதலமைச்சர் பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
"ஊழல் புகார் பற்றி விவாதிக்க நான் ரெடி, நீங்கள் ரெடியா?" - முதலமைச்சர் பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் சவால்
Published on

சென்னை,

ஈரோடு மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில் ஊழல் குறித்து நேரடி விவாதத்துக்கு தயாரா? என்று மு.க.ஸ்டாலினுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்தார்.

இந்நிலையில் இந்த சவாலை ஏற்றுக்கொண்டு ஊழல் புகார் பற்றி விவாதிக்க நான் ரெடி, நீங்கள் ரெடியா என்று முதலமைச்சர் பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

'என்னுடன் நேருக்கு நேர் ஊழல் பற்றி விவாதிக்கத் தயாரா?' என்று முதல்வர் பழனிசாமி நேற்று சவால், சவடால் விடுத்திருக்கிறார். அந்த சவாலை நான் ஏற்கத் தயார்!

அதற்கு முன்னர் பழனிசாமி சில நடவடிக்கைகளைச் செய்து முடிக்க வேண்டும். நாளைக்கே உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்து, 'சம்பந்திக்கு டெண்டர் கொடுத்த நெடுஞ்சாலைத்துறை ஊழல் மீதான சிபிஐ விசாரணைக்கு விதித்த தடையை உடனே நீக்குங்கள். நான் வழக்கை சந்திக்கத் தயார்' என்று பழனிசாமி உத்தரவு வாங்க வேண்டும்.

'எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக அமைச்சர்கள் மீது கொடுத்துள்ள ஊழல் புகார்களை விசாரிப்பதற்கு அனுமதி வழங்குங்கள்' என்று ஒரு அமைச்சரவை தீர்மானத்தை நாளைக்கே நிறைவேற்றி, தமிழக ஆளுநரிடம் உடனடியாக ஒப்படையுங்கள்.

அதே மாதிரி, 'வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவித்ததாக என் மீது கொடுக்கப்பட்டுள்ள ஊழல் புகாருக்கும் நானே அனுமதி தருகிறேன். விசாரணைக்கு உத்தரவிடுங்கள்' என்று தமிழக ஆளுநருக்குக் கடிதம் இன்றைக்கே எழுதுங்கள். அடுத்த நிமிடமே, விவாதத்திற்கு தேதி குறியுங்கள்; எந்த இடம் என்று சொல்லுங்கள். அந்த இடத்திற்கு நான் மட்டும் வருகிறேன். உங்கள் தரப்பில் நீங்களும் உங்கள் அமைச்சரவை சகாக்கள் அனைவரும் வாருங்கள். முடிந்தால் ஓ.பன்னீர்செல்வத்தையும் அழைத்து வாருங்கள். ஊழல் பற்றி விவாதிப்போம்.

அரசு கஜானாவில் பத்தாண்டு கால ஆட்சியில், குறிப்பாக நான்காண்டு கால உங்களது ஆட்சியில் எப்படிக் கொள்ளையடித்து சுரண்டி உள்ளீர்கள், என்ன கமிஷன் வாங்கி உள்ளீர்கள், என்ன கலெக்ஷன் செய்துள்ளீர்கள், எப்படிப்பட்ட கரெப்ஷன் செய்துள்ளீர்கள் என்பதை கிழித்துத் தோரணமாகத் தொங்க விடுகிறேன். நான் ரெடி, முதல்வர் 'மிஸ்டர்' பழனிசாமி நீங்கள் ரெடியா?".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com