‘காதலனோடு ஓடிப் போறேன்... என்னை தேடி வராதீங்க' - மாணவியின் குறுஞ்செய்தியால் தந்தை அதிர்ச்சி

விடுமுறையில் ஊருக்கு வருவதாக கூறிய நிலையில், மகளின் வருகைக்காக காத்திருந்த பெற்றோருக்கு அந்த அதிர்ச்சி தரும் குறுஞ்செய்தி வந்தது.
தேனி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 40 வயது தொழிலாளி. அவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு வயது 19. இளைய மகளுக்கு வயது 15. மூத்த மகள் நர்சிங் படிக்க ஆசைப்பட்டார். அவரை அந்த தொழிலாளி, பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் படிப்பில் சேர்த்தார். அவர் தற்போது 2-ம் ஆண்டு படித்து வருகிறார். விடுமுறையில் அவ்வப்போது அவர் ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.
கடந்த 21-ந்தேதி அந்த மாணவி தனது தந்தையின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். தனக்கு 20 நாட்கள் கல்லூரி விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும், ஊருக்கு புறப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும், தனது செல்போனில் சார்ஜ் இல்லை என்றும் கூறிவிட்டு செல்போனை வைத்துவிட்டார். விடுதி சாப்பாடு சாப்பிட்ட தனது மகளுக்கு வாய்க்கு ருசியாக விடுமுறை நாட்களில் சமைத்துக்கொடுக்க வேண்டும் என்ற ஆசையோடு மகளின் வருகைக்காக அவருடைய பெற்றோர் காத்திருந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த தொழிலாளியின் செல்போனுக்கு தனது மகளின் செல்போனில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், “என்னை தேடாதீர்கள். நான் லவ் (காதல்) பண்ணும் பையன் கூட ஓடிப்போறேன். என்னை தேடி வராதீங்க. உங்களுக்கு தான் காசு வேஸ்ட். நீங்க யாரும் எனக்கு வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த குறுஞ்செய்தியை பார்த்து அந்த தொழிலாளியும், அவருடைய குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். மகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து அந்த தொழிலாளி அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர். அந்த குறுஞ்செய்தியை மாணவி தான் அனுப்பினாரா அல்லது மாணவியின் பெயரில் வேறு யாரேனும் அனுப்பினார்களா என்ற கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






