

சென்னை,
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
அதேவேளை தேனி, திண்டுக்கல், சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் திருப்பத்தூரில் 7 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. வங்கக்கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதன் காரணமாக, மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.