அடிப்படை வசதிகள் கேட்டு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்

அடிப்படை வசதிகள் கேட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்க எடுக்கப்படும் என்று கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் பேசினார்.
அடிப்படை வசதிகள் கேட்டு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்
Published on

வாணாபுரம்

அடிப்படை வசதிகள் கேட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்க எடுக்கப்படும் என்று கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் பேசினார்.

கிராமசபை கூட்டம்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது தலையாம்பள்ளம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். தி.மு.க. மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் பேசியதாவது:-

கிராம சபை கூட்டம் நடைபெறுவதன் மூலம் அரசு கிராமங்களுக்கு என்னென்ன திட்டங்கள் செயல்படுத்துகிறது என்று பொதுமக்கள் தெரிந்து கொள்ள முடியும். ஊராட்சி மூலம் நடைபெறும் திட்டங்களான இல்லம் தேடி கல்வி திட்டம், ஊட்டச்சத்து உறுதி செய்யும் திட்டம், பள்ளிகள் செயல்படும் முறைகள், கிராமங்களில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்.

மேலும் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளர் உள்ளிட்டவர்கள் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்க வேண்டும்.

நிதி ஒதுக்கீடு

கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து அரசுக்கு அனுப்ப வேண்டும். அதன் மூலம் தான் கிராம வளர்ச்சிக்கு நிதி ஒதுக்க முடியும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர், கழிவறை, மின்விளக்கு உள்ளிட்டவைகள் ஏற்படுத்தி தர வேண்டும்.

திடக்கழிவு மேலாண்மை மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்து திடக்கழிவு சேமிப்பு பகுதிக்கு அனுப்ப வேண்டும்.

பொதுமக்கள் கிராமசபை கூட்டத்தில் கேட்கப்படும் திட்டங்கள் அரசு மூலம் நிறைவேற்றி தரப்படும். மேலும் இந்த கிராமத்தில் முதல்-அமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3 சாலைகள் அமைக்க ரூ.1 கோடியே 52 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கலைஞரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் வீடு இல்லாத அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஊராட்சி மன்ற தலைவர், செயலாளர்களிடம் பயனாளிகள் நேரடியாக சென்று பெயர்கள் பதிவில் உள்ளதா? என்று தெரிந்து கொள்ள வேண்டும். கலைஞரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதியானவர்களுக்கு வீடுகள் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. எனவே அதில் பெயர் உள்ளதா? என்று உறுதி செய்ய வேண்டும்.

அடிப்படை வசதிகள்

மேலும் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் அனைத்தும் விரைந்து செயல்படுத்த ஊராட்சி நிர்வாகம் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். அடிப்படை வசதிகள் தேவை என்றால் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு செய்து கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பயனாளிகளுக்கு உதவித்தொகை மற்றும் ஒரு நபருக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகள் வழங்கப்பட்டது.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் துறை அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com