

சென்னை,
தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக பேனர்கள் வைக்கப்படுவது குறித்து டிராபிக் ராமசாமி ஏற்கனவே பல வழக்குகளை சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 26, 27, 28-ந்தேதிகளில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோருக்கு அடுத்தடுத்து பல புகார் மனுக்களை அனுப்பினார்.
அதில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் பல இடங்களில் சட்டவிரோதமாக, அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரதமர் நரேந்திரமோடி சென்னைக்கு வந்தபோதும் இதேபோல பல பேனர்கள் அனுமதியின்றி சட்டவிரோதமாக வைக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.
புகைப்படம் தாக்கல்
இந்த புகார் மனுக்களின் அடிப்படையில், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் தாமாக முன்வந்து பொதுநல வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர். சட்ட விரோத பேனர்கள் வைக்கப்பட்டது தொடர்பான புகைப்படத்தை டிராபிக் ராமசாமி தாக்கல் செய்தார்.
என்ன செய்கிறார்கள்?
இதை பார்த்த நீதிபதிகள், சட்டவிரோதமான பேனர்களை அகற்றாமல், போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் என்ன செய்கிறார்கள்? ஊரெல்லாம் சட்டவிரோதமான பேனர்கள் வைக்கப்படுகின்றன.
வெளியூர் செல்வதற்காக ஒவ்வொரு முறையும் விமான நிலையத்துக்கு செல்லும்போது, நடைபாதை முழுவதையும் ஆக்கிரமித்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. நடைபாதையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு குறுக்கேயும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் சிரமபடுகின்றனர் என்று கருத்து தெரிவித்தனர்.
அகற்றவேண்டும்
மேலும் நீதிபதிகள், இந்த பேனர்களினால், சாலைகளில் உள்ள வழித்தட பலகைகள் கூட தெரிவதில்லை. கிரீன்வேஸ் சாலையில் இருந்து சென்னை ஐகோர்ட்டு வரையில் உள்ள சாலையில் மட்டுமே சட்டவிரோதமாக பேனர்கள் வைக்கவில்லை.
ஏன், இதேபோல பிற சாலைகளையும் அதிகாரிகள் பராமரித்தால் என்ன? எனவே, சென்னையில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்றி, அதுதொடர்பான அறிக்கையை சென்னை போலீஸ் கமிஷனர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற 5-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன் என்று உத்தரவிட்டார்.