ஜமாபந்தியில் 39 மனுக்களுக்கு உடனடி தீர்வு

ஜமாபந்தியில் 39 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
ஜமாபந்தியில் 39 மனுக்களுக்கு உடனடி தீர்வு
Published on

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டத்தில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. இதில் ஜெயங்கொண்டம் வட்டத்திற்கான நான்காம் நாள் ஜமாபந்தி, ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் உடையார்பாளையம் உள்வட்டத்திற்கு உட்பட்ட தேவாமங்கலம், அங்கராயநல்லூர் மேல்பாகம், கீழ்பாகம், சூரியமணல் (குணமங்கலம், கச்சிப்பெருமாள், துளாரங்குறிச்சி உள்பட), இடையார் (ஏந்தல், தூங்கான் உள்பட), வாணதிரையன்பட்டினம், பிலிச்சிக்குழி (ஒக்கநத்தம், காங்கேயன்குறிச்சி உள்பட), உடையார்பாளையம் மேற்கு, கிழக்கு, தா.சோழங்குறிச்சி வடக்கு, தெற்கு, தத்தனூர் மேற்கு, கிழக்கு ஆகிய 13 கிராம பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 231 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 39 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். மீதமுள்ள 192 மனுக்கள் விசாரணையில் உள்ளது.

இம்மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி தீர்வு காணவும், கிராம கணக்குகளை முறையாக பராமரிக்கவும், நில அளவை அலுவலர் பயன்படுத்தும் கருவிகளை பார்வையிட்டு, உரிய முறையில் பராமரிக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா அறிவுறுத்தினார். மேலும் வருகிற 20-ந் தேதி ஜெயங்கொண்டம் உள்வட்டத்திற்கு உட்பட்ட எரவாங்குடி, தண்டலை, கீழக்குடியிருப்பு, பிராஞ்சேரி, பிச்சனூர், வெத்தியார்வெட்டு, ஆமணக்கந்தோண்டி, உட்கோட்டை வடக்கு, தெற்கு, பெரியவளையம், ஜெயங்கொண்டம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறுகிறது.

முன்னதாக சதுரங்க சாம்பியன் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்த சர்வாணிகா, கலெக்டரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) குமரையா, தாசில்தார் துரை, துணை தாசில்தார்கள், நில அளவை அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com