உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் சு.திருநாவுக்கரசர் பேட்டி

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கூறினார்.
உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் சு.திருநாவுக்கரசர் பேட்டி
Published on

சென்னை,

தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நேற்று நடைபெற்றது. ஒரு சில இடங்களில் அரசியல் கட்சி தலைவர்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். அந்த வகையில், காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தத்தனூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் கலந்துகொண்டார். காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரூபி ஆர்.மனோகரன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பங்கேற்ற சு.திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் குடிநீர் பிரச்சினை, சாலை வசதியின்மை, பஸ் வசதியின்மை, ரேஷன் கடைகள் இல்லாதது, பால்வாடி இல்லாதது என்று பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டி புகார் மனுக்களை அளித்தனர். இந்த புகார் மனுக்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திடமும், மாநில நிர்வாகத்திற்கும் அனுப்பிவைக்கப்படும்.

பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை மறைந்த பாரத முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொண்டுவந்தார். அந்த சட்டம் வந்த பிறகுதான் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பஞ்சாயத்து தலைவர்கள் ஆக முடிந்தது. இடஒதுக்கீட்டின் மூலம் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பதவிகளுக்கு வந்தனர்.

திட்டங்களுக்கு நிதி ஒதுக்க எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களால் கூட வங்கி காசோலையில் கையெழுத்து போட முடியாத நிலை இருந்தது. ஆனால், மத்திய அரசு நேரடியாக வழங்கும் நிதியை திட்டங்களுக்கு ஒதுக்க பஞ்சாயத்து தலைவர்களுக்கு அதிகாரம் உண்டு. பஞ்சாயத்து தலைவரும், துணைத்தலைவரும் சேர்ந்து வங்கி காசோலையில் கையெழுத்திட முடியும்.

பாராளுமன்றத்தில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் போன்று, கிராம சபை கூட்டங்களிலும் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். கிராமங்களின் வளர்ச்சிதான் தேசத்தின் வளர்ச்சி. கிராமங்களில் வாழும் மக்கள்தான், சாதி, மத வித்தியாசம் இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். இந்தியாவின் ஒருமைப்பாடு, ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகியவை கிராமங்களில் இருந்தே தொடங்குகிறது.

தற்போதைய நிலையில், தமிழகத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படவில்லை. உள்ளாட்சிக்கு நியமிக்கப்பட்ட தனி அதிகாரிகளே பணிகளை கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். வளர்ச்சித்திட்ட பணிகளை அவர்கள் முறையாக கவனிக்கவில்லை என்றும், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட தொகுதி பக்கம் வரவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டினார்கள்.

உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருப்பது ஜனநாயக படுகொலையாகும். ஜனநாயகம் முழுமையாக வெற்றி பெற வேண்டும் என்றால், பஞ்சாயத்து தேர்தலை உடனடியாக நடத்தியாக வேண்டும். பஞ்சாயத்து தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், சேர்மன் என்று அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்தி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டால்தான், அவர்களை பொதுமக்கள் சந்தித்து திட்டங்களை கேட்டுப்பெற முடியும். எனவே, உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com