ஆள்மாறாட்டம் செய்து இந்தோ-திபெத் படையில் சேர்ந்த 2 பேர் சிக்கினர்

ஆள்மாறாட்டம் செய்து இந்தோ-திபெத் படையில் சேர்ந்து, சிவகங்கை மையத்துக்கு பயிற்சிக்கு வந்த 2 பேர் சிக்கினர்.
ஆள்மாறாட்டம் செய்து இந்தோ-திபெத் படையில் சேர்ந்த 2 பேர் சிக்கினர்
Published on

பயிற்சி மையம்

சிவகங்கையை அடுத்துள்ள இலுப்பைக்குடியில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையின் பயிற்சி மையம் உள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்படும் வீரர்கள் இங்கு வந்து பயிற்சி பெற்று பணி நியமனம் பெறுவார்கள். இந்த பயிற்சி மையத்திற்கு கடந்த மாதம் புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி தொடங்கியது.

இந்நிலையில் உத்தரபிரதேசம் மாநிலம் தனீனா ஜக்னேர் என்ற ஊரை சேர்ந்த அஜய்சிங்(வயது 24) கடந்த மாதம் 30-ந் தேதி பயிற்சியில் சேர்ந்தார். அதன்பின்னர் கடந்த 9-ந் தேதி உத்தரப்பிரதேசம் மாநிலம் நக்லா கோகுல் என்ற கிராமத்தை சேர்ந்த சந்தீப் யாதவ் (27) பயிற்சியில் சேர வந்தார்.

போலீசில் புகார்

இவர்களது வரிசை எண்களை அதிகாரிகள் சரிபார்த்தபோது அஜய்சிங், சந்தீப் யாதவ் ஆகிய 2 பேருக்கும் ஒரே எண் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மைய அதிகாரிகள், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆனால், குறிப்பிட்ட அந்த எண்ணில் அஜய்குமார் என்பவர் தேர்வு எழுதி வெற்றி பெற்றிருந்தது தெரியவந்தது. ஆனால், அஜய்குமார் பயிற்சிக்கு வராமல் அவரது பெயரில் இவர்கள் 2 பேரும் ஆள்மாறாட்டம் செய்து வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை கமாண்டர் ரன்வீர் ராணா, சிவகங்கை மாவட்டம் பூவந்தி போலீசில் புகார் செய்தார். 2 பேரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இந்த ஆள்மாறாட்டம் குறித்து நடவடிக்கை எடுக்க வடமாநில அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இவர்களுக்கு எப்படி அஜய்குமார் வெற்றி பெற்றது தெரியவந்தது, அவர் எங்கு உள்ளார், வறு யாரும் அவர் பெயரை மோசடியாக பயன்படுத்தி படைகளில் சேர்ந்து இருக்கிறார்களா, இதுபோன்று ஏற்கனவே மோசடிகள் நடந்து இருக்கிறதா? என்ற கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரம் இந்தோ-திபெத் பயிற்சி மையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com