

சென்னை,
வாழ்ந்து காட்டுவோம் 2.0 திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்: ஏற்கனவே பணி செய்த 4684 பேருக்கும் மீண்டும் வேலை வழங்க வேண்டும்! என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாட்டின் ஊரக பகுதிகளில் வறுமையை ஒழிக்கும் நோக்குடன் உலக வங்கி நிதியுதவியுடன் தொடங்கப்பட்ட தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் எனப்படும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் 1.0 கடந்த ஆண்டுடன் முடிவடைந்து விட்ட நிலையில், புதிதாக அறிவிக்கப்பட்ட வாழ்ந்து காட்டுவோம் 2.0 திட்டம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. அதனால், வாழ்ந்து காட்டுவோம் 1.0 திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட 4684 பணியாளர்களும் தங்களின் எதிர்காலம் என்னவாகுமோ? என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
கிராமப்பகுதிகளில் தொழில் மேம்பாடு, நிதியுதவியை அணுகும் வாய்ப்பு, தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் ஊரக பகுதிகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடன் உலக வங்கி நிதியுதவியுடன் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் 1.0 கடந்த 2017-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக 31 மாவட்டங்களில் உள்ள 120 வட்டாரங்களில் 3,994 ஊராட்சிகளில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்திற்காக ஊராட்சிக்கு ஒரு தொழில்சார் சமூக வல்லுனர்கள் வீதம் 3994 பேரும், மாநில அளவில் 64 பேர், மாவட்ட அளவில் 146 பேர், வட்டார அளவில் 480 பேர் என மொத்தம் 4,684 பேர் பணியமர்த்தப்பட்டனர்.
வாழ்ந்து காட்டுவோம் 1.0 திட்டம் கடந்த ஆண்டு நிறைவடைந்த நிலையில், உடனடியாக அத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடந்த ஆட்சியில் அதற்கான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. புதிய அரசிலும் எந்த அறிவிப்பும் வெளிவராத நிலையில், அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட ஊரக வளர்ச்சி துறைக்கான மானிய கோரிக்கையில் வாழ்ந்து காட்டுவோம் 2.0 திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன்பின் ஒரு மாதத்திற்கு மேலாகியும் அரசாணை பிறப்பிக்கப்படவில்லை.
வாழ்ந்து காட்டுவோம் 2.0 திட்டம் தமிழகத்தில் சென்னை தவிர்த்து மீதமுள்ள 37 மாவட்டங்களில் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங்களிலும் செயல்படுத்தப்படும் என்றும், இத்திட்டத்திற்காக ரூ.1000 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தத் திட்டம் 4000-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட வேண்டும். ஆனால், திட்டம் அறிவிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 3994 ஊராட்சிகளில் நியமிக்கப்பட்டிருந்த தொழில்சார் சமூக வல்லுனர்கள் கடந்த ஜனவரி மாதத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மாவட்ட அளவில் பணியமர்த்தப்பட்டிருந்தவர்களில் 120 பேர் கடந்த ஒன்றாம் தேதி முதல் பணி நீக்கப்பட்டனர். இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படாததால் பணியாளர்கள் எவருக்கும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லை.
புதிய திட்டத்திற்கான அரசாணை இன்னும் வெளியிடப்படாததால் வாழ்ந்து காட்டுவோம் 1.0 திட்டத்தில் பணி செய்த அனைவரும் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும், புதிய திட்டத்திற்காக புதிய தொழிலாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் தங்களின் எதிர்காலம் இருண்டு விடுமோ? என்ற ஐயம் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
வாழ்ந்து காட்டுவோம் 1.0 திட்டத்தில் 9 ஆண்டுகளாக பணி செய்தவர்களை திடீரென பணி நீக்கம் செய்தால் அவர்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள்; அவர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடும் நிலை உருவாகும். இப்போது வாழ்ந்து காட்டுவோம் 2.0 திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்காக இந்த பணியாளர்களின் சேவையை அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
எனவே, வாழ்ந்து காட்டுவோம் 2.0 திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும். இந்த திட்டம் செயல்படுத்தப்படும் இடங்களில் ஏற்கனவே பணியாற்றிய பணியாளர்களுக்கு பணி வழங்குவதுடன், இன்னும் வழங்கப்படாத ஜூலை , ஆகஸ்ட் மாதங்களுக்கான ஊதியத்தை உடனடியாக வழங்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.