

திருவள்ளூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் நிலையம் ராஜாஜிபுரம் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் ரேஷன் அரிசி கடத்துவது உள்ளிட்ட வழக்குகளில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட லாரி, வேன், மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய சாலையின் ஓரங்களில் சாலையை ஆக்கிரமித்து நாலா புறமும் நிறுத்தி வைத்துள்ளனர்.
அதேபோல் போலீஸ் நிலையம் அமைந்துள்ள கட்டிடத்திற்கு பக்கத்தில் தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில் பெரும்பாலான வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். இந்த வாகனங்களை முறையாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரால் பொதுமக்களுக்கு ஏலம் விடுவதைப் போன்று ஏலம் விடாமலும் நீதிமன்றத்தின் மூலம் அவற்றை அப்புறப்படுத்தாமலும் வருட கணக்கில் நிறுத்தப்பட்டுள்ளதால் மழை, பனி, வெயில் உள்ளிட்ட இயற்கை சூழ்நிலைகளால் வாகனங்கள் துருப்பிடித்து ஒன்றுக்கும் பயன்படாதவாறு பாழடைந்து கிடக்கிறது.
எனவே பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிய நேரத்தில் ஏலம் விட வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.