பச்சையப்பா அறக்கட்டளை கல்லூரிகளில் 105 உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு - ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்

பச்சையப்பா அறக்கட்டளை கல்லூரிகளில் 105 உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பச்சையப்பா அறக்கட்டளை கல்லூரிகளில் 105 உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு - ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்
Published on

சென்னை,

சென்னை பச்சையப்பா அறக்கட்டளையின் கீழ் பச்சையப்பா ஆண்கள் கல்லூரி, கந்தசாமி நாயுடு ஆண்கள் கல்லூரி, செல்லம்மாள் மகளிர் கல்லூரி உள்ளிட்ட 6 கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. பச்சையப்பா அறக்கட்டளையில் முறைகேடுகள் நடப்பதாக ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி, அறக்கட்டளை உறுப்பினர்கள் தேர்தலை நடத்தவும், அதற்காக ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி பி.சண்முகத்தை அறக்கட்டளை தலைவராக நியமித்தும் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சிலர் ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்சில் மேல்முறையீடு செய்தனர். ஆனால், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க டிவிசன் பெஞ்ச் மறுத்துவிட்டது. இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டில் ஓய்வு பெற்ற நீதிபதி பி.சண்முகம் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

அதில், பச்சையப்பா அறக்கட்டளைக்கு கீழ் உள்ள கல்லூரிகளில் 105 உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு எதிராக அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான டிவிசன் பெஞ்ச் வாய்மொழி உத்தரவின்படி, மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், இப்பதவியில் என்னால் நீடிக்க முடியாத நிலை உள்ளது. எனவே தன்னை தலைவர் பதவியில் இருந்து விடுவித்து, வேறொரு தகுதியான நபரை தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பான வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com