

சென்னை,
சென்னை மாநகரப்பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த பற்றாக்குறையை போக்கும் வகையில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் தினசரி 10 மில்லியன்(ஒரு கோடி) லிட்டர் தண்ணீர் சென்னைக்கு கொண்டு வர மாநில அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக ரூ.65 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.
இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, சென்னை குடிநீர் வாரியம், வேலூர் மாவட்ட குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் மற்றும் நகரப்பகுதிகளில் நேற்று ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் தினசரி 10 மில்லியன் தண்ணீர் (2.5 மில்லியன் வீதம் 4 முறைகள்) கொண்டு வருவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதற்காக ஜோலார்பேட்டை- வாணியம்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள கேத்தாண்டபட்டி ரெயில் நிலையம், பார்சம்பேட்டை ரெயில்வே கேட் அருகே உள்ள ரெயில்வே பள்ளி பின்புறம் ஆகிய 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
இதில் கேத்தாண்டபட்டி ரெயில் நிலையம் அருகே உள்ள தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டி 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டது. இதற்கு வாணியம்பாடியை அடுத்த அம்பலூர் மற்றும் ராமநாயக்கன் பேட்டையில் ரெயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான கிணற்றில் இருந்து தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.
இங்கிருந்து ரெயில் நிலையம் மற்றும் ரெயில்வே குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் தற்போது அங்கும் தண்ணீர் பிரச்சினை இருப்பதால் ஒப்பந்த அடிப்படையில் தினசரி 96 ஆயிரம் லிட்டர் குடிநீரை லாரிகள் மூலம் ரெயில்வே நிர்வாகம் வாங்கி வருகிறது. இதனால் பயணிகள் மற்றும் குடியிருப்புகளுக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவு ஓரளவு குறைந்து உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டைக்கு ரெயில் வேகன்கள் மூலம் ரெயில்வே நிர்வாகம் தண்ணீர் கொண்டு வந்தது. இதற்காக பார்சம்பேட்டையில் 6 லட்சம் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. இதில் இருந்து 500 மீட்டர் தொலைவில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் செல்கிறது.\
இதில் இருந்து சென்னைக்கு குடிநீர் வினியோகம் செய்ய இந்த இடம் தேர்வு செய்ய அதிகம் வாய்ப்பு உள்ளது.
பார்சம்பேட்டையில் உள்ள தரை நீர்த்தேக்க தொட்டியில் மேட்டூர் கூட்டுக்குடிநீர் திட்ட தண்ணீரை நிரப்பி, அங்கிருந்து ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் உள்ள குழாய்கள் மூலம் தண்ணீரை கொண்டு வந்து ரெயில் வேகன்கள் மூலம் ஏற்றி சென்னைக்கு கொண்டு வருவது எளிதாகும்.
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள 5 நடைமேடைகளில் உள்ள குழாய்கள் மூலம் பயணிகள் ரெயில் மற்றும் ரெயில் வேகன்களில் தண்ணீரை ஏற்றுவது சுலபமாகும்.
இந்த திட்டத்தை நிறைவேற்ற தீவிரமாக பணியாற்றி வருகிறோம். அதேபோல் தினசரி 4 தடவை என்பதை அதிகரிக்கவும் முடியுமா? என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். இதுதொடர்பான ஆய்வு அறிக்கை ஓரிரு நாட்களில் தலைமைச் செயலகத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் உயர் அதிகாரிகள் முடிவுகளை அறிவிக்க உள்ளனர்.
எப்படியும் 2 வாரங்களுக்குள் பணிகளை முடித்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான பணிகள் தொடங்கும். இதன் மூலம் 18 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மக்களின் தாகம் தீர்க்க ரெயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட இருக்கிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.