சிதம்பரத்தில் 25 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல்நிலை தேர்வு 5 ஆயிரம் பேர் எழுதினர்

சிதம்பரத்தில் 25 மையங்களில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல்நிலை தேர்வை 5 ஆயிரத்து 82 பேர் எழுதினர்.
சிதம்பரத்தில் 25 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல்நிலை தேர்வு 5 ஆயிரம் பேர் எழுதினர்
Published on

தமிழகத்தில் குரூப்-1 பணியிடங்களுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முக தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது துணை கலெக்டர், வணிகவரி உதவி கமிஷனர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, ஊரக மேம்பாட்டுத்துறை உதவி இயக்குனர் ஆகிய குரூப்-1 பதவிகளில் உள்ள 92 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த ஜூலை மாதம் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. இதில் அக்டோபர் 30-ந் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பிறகு நிர்வாக காரணங்களுக்காக தள்ளிவைக்கப்பட்டு, நவம்பர் 19-ந் தேதி (அதாவது நேற்று) நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வுக்காக கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 8,613 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

25 மையங்கள்

இந்த தேர்வுக்காக சிதம்பரம் தாலுகாவில் 25 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று குரூப்-1 முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இதற்காக விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு காலை 8 மணி முதலே வர தொடங்கினர். பின்னர் அவர்கள் பலத்த சோதனைக்கு பிறகு தேர்வறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதில் செல்போன் கொண்டு வந்திருந்த இளைஞர்களிடம், கண்காணிப்பாளர்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் தேர்வு முடிவடைந்த பிறகு அந்த செல்போன்கள் மீண்டும் சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கப்பட்டது. காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு, மதியம் 12.30 மணிக்கு முடிவடைந்தது.

கடலூர் மாவட்டத்தில் இத்தேர்வை 5 ஆயிரத்து 82 பேர் எழுதினர். மேலும் விண்ணப்பித்தவர்களில் 3 ஆயிரத்து 531 பேர் தேர்வு எழுத வரவில்லை. மேலும் குரூப்-1 தேர்வையொட்டி தேர்வு மையங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கலெக்டர் ஆய்வு

அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் நடந்த இத்தேர்வை கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சிதம்பரம் உதவி கலெக்டர் சுவேதாசுமன், தாசில்தார் ஹரிதாஸ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com