பரபரப்பான அரசியல் சூழலில்; அ.தி.மு.க. கொடி கட்டிய காரில் சசிகலா சுற்றுப்பயணம்

பரபரப்பான அரசியல் சூழலில் அ.தி.மு.க. கொடி கட்டிய காரில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதற்கட்டமாக திருத்தணியில் அவர் தொண்டர்களை சந்தித்து பேசினார்.
பரபரப்பான அரசியல் சூழலில்; அ.தி.மு.க. கொடி கட்டிய காரில் சசிகலா சுற்றுப்பயணம்
Published on

சென்னை,

சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூருவில் சிறைவாசம் அனுபவித்து வந்த சசிகலா, அரசியலில் ஒதுங்கி இருக்கப்போவதாக அறிவித்தார். பின்னர் ஒரு கட்டத்தில் மீண்டும் அரசியலுக்கு வருவதாக கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். தொண்டர்களுடன் தினமும் தொலைபேசியில் பேசினார். 'நான் நிச்சயம் வருவேன், கட்சியை நல்லபடியாக வழிநடத்துவேன், கொரோனா ஓய்ந்ததும் தொண்டர்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்', என்றெல்லாம் கூறி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதன்பிறகு மவுனம் காத்து வந்த சசிகலா, தற்போது தொண்டர்களை சந்திக்க சுற்றுப்பயணத்தை தொடங்கியிருக்கிறார். அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் எதிரெதிர் துருவங்களாக பிரிந்து போயிருக்கின்றனர். இந்த சூழலில் சசிகலா திருத்தணி நோக்கி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

திருத்தணி நோக்கி...

இதன்படி, சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள சசிகலா இல்லம் முன்பு நேற்று அவரது ஆதரவாளர்கள் கூடினர். பிற்பகல் 1.40 மணிக்கு சசிகலா தனது இல்லத்தில் இருந்து அ.தி.மு.க. கொடி கட்டிய பிரசார வாகனத்தில் புறப்பட்டார்.

அப்போது அங்கு நின்றிருந்த அவரது ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்தனர். 'அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சின்னம்மா... வாழ்க' என கோஷம் எழுப்பினர். பிரசார வாகனத்தை நோக்கி மலர்களை தூவி வாழ்த்தினர். தொண்டர்கள் சிலர் சால்வைகளையும், மாலைகளையும் வழங்கினர். பிரசார வாகனத்தில் அமர்ந்தபடியே அதனை சசிகலா பெற்றுக்கொண்டார். சிலர் வேல், வீரவாள் போன்றவற்றையும் வழங்கினர்.

சாமி தரிசனம்

தியாகராயநகர் இல்லத்தில் புறப்பட்ட அவரை மதுரவாயல், பூந்தமல்லி, பனிமலர் கல்லூரி அருகே, திருவள்ளூர், திருத்தணி புறவழிச்சாலை ஆகிய பகுதிகளில் அ.தி.மு.க. கொடியுடன் காத்திருந்த ஆதரவாளர்கள் ஆர்ப்பரிப்பு கோஷங்கள் எழுப்பியும், பூக்களை தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். சிலர் பலா உள்ளிட்ட கனிகளை வழங்கினர்.

அந்த வரவேற்பை சசிகலா மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். கூட்டத்தில் இருந்து குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தார். அதனைத்தொடர்ந்து திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார்.

பொதுமக்களுடன் சந்திப்பு

திருத்தணி, குண்டலூரில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை சசிகலா சந்தித்து பேசினார். குண்டலூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கோரமங்கலம், கே.ஜி.கண்டிகை, எஸ்.வி.ஜி.புரம், கிருஷ்ணகுப்பம், ஆர்.கே.பேட்டை ஆகிய இடங்களை பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்தார். ஆர்.கே.பேட்டையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கிருந்து புறப்பட்டு அம்மையர்குப்பம் சென்று, அங்கு பொதுமக்கள், தொண்டர்களை சந்தித்தார்.

முன்னதாக திருத்தணியில் சசிகலா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க தலைமைக்கு...

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. அதன் அடிப்படையில் தற்போது புரட்சி சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளேன். அடுத்த ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி. அந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சியாக இருக்கும். அ.தி.மு.க.வில் தற்போது இருக்கக்கூடிய பிரச்சினை நிச்சயம் சரி செய்யப்படும்.

அ.தி.மு.க. தொண்டர்களும் மக்களும் என்னுடன் இருக்கிறார்கள். அ.தி.மு.க.வில் தற்போது இருக்கக்கூடிய பிரச்சினைகளை சரி செய்ய முடியும். தற்போது தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அவர்கள் நான்தான் தலைமைக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

மேலும் அ.தி.மு.க.வில் இருவருக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினை கட்சி முழுவதும் அப்படியே பிரச்சினையில் இருக்கிறது என்பதாக எடுத்துக்கொள்ள முடியாது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்குள் அ.தி.மு.க. ஒரு தலைமையின் கீழ் வரும். அதில் மிகப்பெரிய வெற்றியை பார்க்கப்போகிறீர்கள். அதை நிச்சயம் நான் செய்வேன்.

இவ்வாறு சசிகலா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com