

சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பலர் அதற்கான அறிகுறி கூட இல்லாமல் நடமாடக்கூடும் என்று கூறப்படும் நிலையில், ஊரடங்கை 99 சதவீதம் பின்பற்றி ஒரேயொரு சதவீதத்தினர் கடைப்பிடிக்காமல் இருந்தால்கூட அவர்கள் மூலமாக கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளது. அதுமட்டுமின்றி, வரும் ஏப்ரல் 20-ந்தேதிக்கு பிறகு ஏராளமான தளர்வுகளை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இத்தகைய சூழலில், தமிழ்நாட்டு மக்கள் வழக்கத்தைவிட தீவிரமாக ஊரடங்கு ஆணையை கடைப்பிடிப்பது கட்டாயமாகும். அதேநேரத்தில் மத்திய-மாநில அரசுகள் தீவிரம் காட்டவேண்டிய விஷயங்களும் உள்ளன. ஊரடங்கின் மூலம் நோய்ப்பரவலை கட்டுப்படுத்த முடியுமே தவிர, குணப்படுத்த முடியாது. நோய் பாதித்த பகுதிகளில் வாழும் மக்களை சோதித்து அவர்களுக்கு பாதிப்பு இருந்தால், மருத்துவம் அளித்து குணப்படுத்த வேண்டும். அதன்பிறகுதான் ஊரடங்கு ஆணையை தளர்த்த முடியும்.
அதற்கு கொரோனா நோய் பாதித்த பகுதிகளில் அதிவேக ரத்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு தேவையான கருவிகளை உடனடியாக இறக்குமதி செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் முதற்கட்டமாக 21 நாட்கள், 2-ம் கட்டமாக 19 நாட்கள் என ஒட்டுமொத்தமாக 40 நாட்கள் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் நிலையில், அதுமீண்டும் நீட்டிக்கப்படாமல் இருப்பது அரசு மற்றும் பொதுமக்கள் கைகளில் தான் உள்ளது.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.