சிறுவர் வாகனம் ஓட்டி விபத்து நிகழ்ந்தால் பெற்றோருக்கு ரூ.1 லட்சம் அபராதம்:கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை

சிறுவர் வாகனம் ஓட்டி விபத்து நிகழ்ந்தால் பெற்றோருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிறுவர் வாகனம் ஓட்டி விபத்து நிகழ்ந்தால் பெற்றோருக்கு ரூ.1 லட்சம் அபராதம்:கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை
Published on

சாலை பாதுகாப்பு கூட்டம்

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்புக்குழு சிறப்பு கூட்டம் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் பேசும் போது,

சாலைவிதிகள்

மாணவ, மாணவிகள் தான் வருங்கால இந்தியா. எனவே நீங்கள் சாலை விதிகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். சாலை விதிகளை பின்பற்றாமல் பலர் விபத்தில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர். ஆகையால் கண்டிப்பாக சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். நமது உயிர் மிகவும் உன்னதமானது. அதை சாலைகளில் இழக்கக்கூடாது. நாட்டுக்காக போரில் உயிரிழக்கலாம் அல்லது ஏதாவது ஆய்வு செய்து அதனால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கலாம் அல்லது ஒரு நல்ல காரியத்துக்காக உயிரிழக்கலாம். ஆனால் சாலைகளில் உயிரிழக்கக்கூடாது.

ரூ.1 லட்சம் அபராதம்

ஓட்டுநர் உரிமம் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள்தான் பெற முடியும். எனவே 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சைக்கிள் ஓட்டலாம். மற்ற மோட்டார் வாகனங்களை ஓட்டுநர் உரிமம் பெற்ற பின்னர்தான் ஓட்ட வேண்டும். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்கள் ஓட்டி விபத்துக்குள்ளானால் போலீஸ் மூலம் வழக்குப்பதிவு செய்யப்படும். 25 வயது வரை ஓட்டுநர் உரிமமும் வழங்கப்படமாட்டாது. வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, பெற்றோருக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். உயிரிழப்பு ஏற்பட்டால் 3 வருடம் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும். இதனால் படிப்பு பாதிக்கப்படுவதுடன் எதிர்காலத்தில் அரசு வேலைக்கும் செல்ல முடியாத நிலை ஏற்படும். தனியார் துறையிலும் நன்னடத்தை சான்றிழ் கேட்பதால் தனியார் துறை வேலைவாய்ப்பு கிடைப்பதும் பாதிக்கப்படும்.

ஆகையால் சாலை விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். எந்த வாகனத்தில் பயணம் செய்தாலும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். உயிர் விலைமதிப்பு இல்லாதது. உங்கள் நண்பர்களிடமும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றி சிறந்த சாலை பாதுகாப்பு உள்ள தேசமாக இந்தியாவை மாற்றுவோம் என்று கூறினார்.

மேயர் ஜெகன் பெரியசாமி

நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசும் போது, நாம் பயன்படுத்தும் சாதாரண மொபைல் போனுக்கே பாதுகாப்பாக உறை போட்டுத்தான் வைத்துள்ளோம். காலில் முள், கல் குத்திவிடக்கூடாது என்பதற்காக செருப்பு அணிந்துள்ளோம். அதேபோல் நமது உயிரை பாதுகாப்பது நமது கடமை. சாலை விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் இருப்பவர்களும் சட்டப்படி கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். தூய்மையான தூத்துக்குடி திட்டத்தின் கீழ் வீட்டுக்கு ஒரு மரத்தை நாம் வளர்க்க வேண்டும். தூத்துக்குடியின் சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு நீங்களும் மரம் வளர்க்க வேண்டும் என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள், புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மரியஜோசப் அந்தோணி மற்றும் அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com