

திருவொற்றியூர்,
சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்தவர் தனசேகர் (வயது 37). அதே பகுதி 10-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (32). இருவரும் பிரபல ரவுடிகள். இருவரும் தனித்தனி கோஷ்டியாக செயல்பட்டு வந்தனர். இருதரப்பினரும் அடிக்கடி மோதிக்கொள்வது வழக்கம்.
இந்த நிலையில் ரவுடிகள் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்தனர். இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு தனசேகர் கோஷ்டியை சேர்ந்த சதீஷ் என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தனியாக சென்ற ரமேஷ் கோஷ்டியை சேர்ந்த குட்டியான் என்பவரை துப்பாக்கியை காட்டி மிரட்டி முட்டி போட வைத்து ரவுடி ரமேசை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்து சென்றதாக தெரிகிறது. இதனையடுத்து ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள், தனசேகர் கூட்டாளிகளை கொலை செய்ய தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி அன்னை சிவகாமி நகர் கடற்கரை பகுதியில் ரவுடி ரமேஷ் தனது கூட்டாளிகள் அலெக்சாண்டர், செந்தில் உள்ளிட்ட சிலர் கடற்கரையில் அமர்ந்து மது அருந்தினர். போதை ஏறியதும் ரவுடி ரமேஷ் தனது கைத்துப்பாக்கியை அலெக்சாண்டரிடம் கொடுத்துள்ளார். அலெக்சாண்டர் அதை வைத்துக்கொண்டு அந்த வழியாக போவோரையும், வருவோரையும் மிரட்டினார்.
அப்போது குடிபோதையில் இருந்த அலெக்சாண்டருக்கும், செந்திலுக்கும் தகராறு ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரவுடி ரமேஷ் துப்பாக்கியை வாங்கி செந்திலின் இடுப்புக்கு கீழே சுட்டார். இதில் செந்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் அடைந்தார். உடனே ரமேஷ், துப்பாக்கியால் சுட்டதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.
இதனால் பயந்து போன செந்தில், துப்பாக்கி குண்டுகளை தானாகவே அகற்றினார். பின்னர் மருந்தகத்தில் இருந்து மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டார். ஆனால் அவருக்கு தொடர்ந்து வலி ஏற்படவே சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது இடுப்புக்கு கீழே துப்பாக்கி குண்டு இருப்பதை ஸ்கேன் கருவி மூலம் கண்டுபிடித்தனர். இதனையடுத்து எண்ணூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் எண்ணூர் போலீசார் விரைந்து சென்று செந்திலிடம் விசாரித்தபோது, தன்னை ரமேஷ் துப்பாக்கியால் சுட்டதாக கூறினார்.
இதனையடுத்து போலீஸ் உதவி கமிஷனர் உக்கிரபாண்டி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோத்தகிரியில் தலைமறைவாக இருந்த அலெக்சாண்டரை கைது செய்தனர். மேலும் துப்பாக்கி வைத்திருந்த பிரபல ரவுடி ரமேசையும் தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த ரமேஷ் எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் முன்னிலையில் சரண் அடைந்தார்.
செந்திலுக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து துப்பாக்கி சூட்டிற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி எந்த வகையைச் சேர்ந்தது. இந்த துப்பாக்கி ரவுடிகளின் கைகளுக்கு எப்படி வந்தது? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக ரவுடிகள் அட்டகாசம் குறைந்து இருந்த அன்னை சிவகாமி நகர் பகுதியில் துப்பாக்கியுடன் ரவுடிகள் சுற்றி வருவது அப்பகுதி பொதுமக்களிடையே பீதியை உண்டாக்கி உள்ளது.