

சென்னை,
பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உயர்த்தப்பட்ட கட்டணத்தை உடனடியாக வாபஸ் பெறக்கோரியும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (ஏ.ஐ.எஸ்.எப்) சார்பில் மவுண்ட் ரோடு அண்ணாசிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மன்றத்தின் மாநில செயலாளர் தினேஷ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட 15 பேர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் திடீரென்று மவுண்ட் ரோட்டில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து, குண்டுக்கட்டாக தூக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றி அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்தனர்.
முன்னதாக தினேஷ் நிருபர்களிடம் கூறுகையில், பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது போலீசார் அடக்குமுறையை கையாண்டு வருகிறார்கள். இது நியாயமான நடைமுறை அல்ல என்றார்.