மத்திய அரசுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த நீதித்துறையும் சாய்ந்து விடவில்லை ஓய்வுபெற்ற நீதிபதி பேட்டி

சி.பி.ஐ., வருமான வரித்துறையை போல மத்திய அரசுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த நீதித்துறையும் சாய்ந்து விடவில்லை என்று ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி டி.அரிபரந்தாமன் கூறினார்.
மத்திய அரசுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த நீதித்துறையும் சாய்ந்து விடவில்லை ஓய்வுபெற்ற நீதிபதி பேட்டி
Published on

சென்னை,

பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக கூறி, மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் என கருதப்படும் வெர்னன் கோன்சால்வ்ஸ், அருண் பெரேரா, மனித உரிமை ஆர்வலர் கவுதம் நவலகா, புரட்சிகர இடதுசாரி எழுத்தாளர் வரவர ராவ், இடதுசாரி சிந்தனையாளரும், வக்கீலுமான சுதா பரத்வாஜ் ஆகிய 5 பேரை மராட்டிய போலீசார் கைது செய்தனர்.

இதை கண்டித்து, மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் நிர்வாகிகளும், ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி டி.அரிபரந்தாமனும் கூட்டாக நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது நீதிபதி டி.அரிபரந்தாமன் கூறியதாவது:-

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கொள்கையை கொண்டவர்களையும், சமூக ஆர்வலர்களையும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்கின்றனர். அதுவும் இந்த சட்டப்பிரிவின் கீழ் பதிவாகும் வழக்குகளில் ஜாமீன் கிடைக்காது என்பதால், போலீசார் இந்த சட்டத்தை கையில் எடுக்கின்றனர். இந்த சட்டம், பொடா, மிசா போன்ற சட்டங்களை போன்றது தான். ஜனநாயக நாட்டிற்கு இதுபோன்ற சட்டம் தேவையில்லை.

இந்த சட்டத்தின் கீழ் மராட்டிய மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து, சமூக ஆர்வலர்கள் வெர்னன் கோன்சால்வ்ஸ் உள்பட 5 பேரை கைது செய்துள்ளனர். அதுவும் இந்த 5 பேர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தீவிரமானது. அப்படிப்பட்ட ஒரு வழக்கை மாநில போலீசார் ஏன் விசாரிக்கின்றனர்? இந்த வழக்கு உள்நோக்கத்துடன், பொய்யான குற்றச்சாட்டுகளுடன் சமூக ஆர்வலர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. மராட்டிய போலீசாரின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நிருபர்கள், பொய் வழக்குகளை பதிவு செய்யும் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியின் மீது நீதிபதிகள் ஏன் நடவடிக்கை எடுப்பது இல்லை? நீதித்துறையும், மத்திய, மாநில அரசுகளுக்கு ஆதரவாகத்தான் செயல்படுகிறது என்று சொல்லலாமா? என்று கேட்டனர்.

அதற்கு நீதிபதி அரிபரந்தாமன், நீதித்துறைக்கும், நீதிபதிகளுக்கும் குறிப்பிட்ட அளவில்தான் அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தை வைத்து நீதிபதிகள் நீதிபரிபாலனத்தை செய்கின்றனர். இதற்கு உதாரணமாக, திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு மறுத்துவிட்டார். சீமை கருவேலம் மரத்தை அகற்றிய நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தபோது, அவர்களை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கரூர் மாஜிஸ்திரேட்டு கூறியுள்ளார். தற்போது மராட்டிய மாநில போலீசாரால் கைது செய்ய 5 சமூக ஆர்வலர்களை வீட்டுக்காவலில் வைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது என்று கூறினார்.

மேலும், சி.பி.ஐ., வருமான வரித்துறை உள்ளிட்ட சில துறைகள் ஆட்சியாளர்களுக்காக தங்களது முழு முகத்தையும் மாற்றிக் கொண்டது போல, மத்திய, மாநில அரசுகளுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த நீதித்துறையும் சாய்ந்து விடவில்லை, அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் இருக்கலாம். அதற்காக ஒட்டுமொத்த நீதித்துறை மீது குறை கூறமுடியாது என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com